திருமண தடையை நீக்கும் ஆடி செவ்வாய் ஔவையார் விரதம்.. இருப்பது எப்படி?
Avvaiyar Viratham: ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் ஔவையார் விரதம், திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களால் கடைபிடிக்கப்படும் ஒரு சிறப்பு விரதம். இந்த விரதத்தில், பெண்கள் ஒன்று கூடி, ஔவையாரை வழிபட்டு, கொழுக்கட்டை நைவேத்தியம் செய்கின்றனர். இதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கிறது.

ஆடி மாதம் செவ்வாய்கிழமை என்பது பல்வேறு விசேஷங்கள் நிறைந்தது. இந்த நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த ஆடி மாத செவ்வாய்கிழமையில் பெண்கள் மட்டுமே இருக்கும் விரதம் ஒன்றும் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதுதான் “ஔவையார் விரதம்”. ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என சொல்லப்பட்டாலும் இந்த மாதத்தில் முருகப்பெருமான் மற்றும் தெய்வப்புலவராக அறியப்படும் அவ்வையார் ஆகியோரும் வழிபடப்படுகிறார்கள். இப்படியான நிலையில் இந்தக் கட்டுரையில் நாம் ஔவையார் விரதம் இருப்பது பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் காணலாம்.
ஔவையார் விரதம் இருப்பது எப்படி?
ஆடி மாதம் பெண்கள் கடைபிடிப்பதற்கு என எத்தனையோ விரதங்கள் இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமான ஒன்றாக ஔவையார் விரதம் பார்க்கப்படுகிறது. இந்த விரதத்தை திருமணம் ஆன சுமங்கலி பெண்களும், திருமணமாகாத இளம் பெண்களும் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மட்டுமல்லாமல் தை மற்றும் மாசி மாத செவ்வாய்க்கிழமைகளில் எந்த விரதத்தை நாம் பின்பற்றலாம். இந்த விரதத்திற்கு பாட்டி வழிபாடு, செவ்வாய் பிள்ளையா விரதம் என பல பெயர்களும் உண்டு.
இரவும் தொடங்கி அதிகாலை வரை நடைபெறும் இந்த ஔவையார் விரதத்தில் வீட்டில் இருக்கும் ஆண்கள் தூங்கிய பிறகு விரதம் இருக்கும் பெண்கள் மட்டும் ஒரு வீட்டில் ஒன்று கூடுவார்கள். சுமங்கலி பெண்களில் மூத்த வயதினர் வழிகாட்டுதலை சொல்ல சொல்ல இளம்பெண்கள் இந்த விரதத்தை தொடங்குவார்கள். பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயார் செய்ய வேண்டும். வழிபாட்டில் பயன்படுத்தப்படும் இந்த கொழுக்கட்டை ஔவையார் கொழுக்கட்டை என சொல்லப்படுகிறது.
Also Read: ஆடி மாத சிறப்பு: சத்தும் சுவையும் நிறைந்த ‘ஆடி கூழ்’ செய்வது எப்படி..?
ஔவையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபாடு நடைபெறும். இந்த வழிபாட்டில் கொழுக்கட்டை தவிர்த்து வைக்கப்படும் நைவேத்தியங்களில் உப்பு சேர்க்கப்பட்டிருக்காது. இந்த வழிபாட்டு பிரசாதங்கள் எவையும் ஆண்களுக்கு கொடுக்கப்படாது. மேலும் இந்த விரதத்தை ஆண்கள் யாராவது பார்த்தால் அவர்களின் கண் பார்வை பறிபோகும் என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் பச்சரிசியை உரலில் குத்தும்போது எழும் சத்தம் கூட அவர்களின் காதில் கேட்கக் கூடாது என்பதும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
Also Read:Kathayee Amman: ஒரே கருவறையில் மூன்று அம்மன்கள்.. இந்த கோயில் தெரியுமா?
ஔவையார் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
இந்த ஔவையார் விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கிடைக்கும். கணவரின் ஆயுள் நீடிக்கும். திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் வரன் கிடைக்கும். அதேபோல் புதுமண தம்பதிகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் தொடர்பான செய்திகள் கிடைக்கும் எனவும் ஐதீகமாக உள்ளது.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)