AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vekkaliyamman Temple: நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!

Tamilnadu Temples: உறையூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோயிலின் வரலாறு சோழ மன்னனின் ஆணவத்தால் ஏற்பட்ட அழிவைத் தடுத்த வெக்காளியம்மனின் அற்புதம் ஆகியவை கொண்டதாக உள்ளது. பக்தர்களின் நம்பிக்கைக்குரிய இடமாக இந்தக் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

Vekkaliyamman Temple: நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
உறையூர் வெக்காளியம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 19 Jun 2025 11:49 AM IST

இந்து மத வழிபாட்டில் ஏராளமான பெண் தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகிறது. கல்வி தொடங்கி செல்வம், வீரம், ஆயுள், இல்வாழ்க்கை என பல விஷயங்களுக்கும் பெண் தெய்வங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெண் தெய்வங்களில் கோபத்தின் வடிவமாகவும் கருணையின் உருவமாகவும் அறியப்படுபவர் காளியம்மன். பலருக்கும் காளியம்மன் என்ற பெயரை கேட்டாலே அவரின் ஆக்ரோஷமான தோற்றம்தான் நினைவுக்கு வரும். ஆனால் தீய சக்திகளை அழித்து பக்தர்களுக்கு நன்மை அளிப்பவள் காளி என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நீதியின் பக்கம் நின்று தவறு செய்பவர்களை தண்டிப்பதால் காளியம்மன் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். இப்படியான நிலையில் திருச்சி மாவட்டம் உறையூரில் கோயில் கொண்டிருக்கும் புகழ்பெற்ற வெக்காளியம்மன் திருக்கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். சூரவாதித்த சோழன் உருவாக்கிய இந்த உறையூரில் கோயில் கொண்டிருக்கும் வெக்காளியம்மன் அப்பகுதியின் காவல் தெய்வமாக வழிபடப்படுகிறார். தினமும் காலை 6 மணி முதல் நடை சாற்றப்படாமல் இரவு 8:30 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். நாம் இந்த கா வெக்காளியம்மன் கோயில் உருவான வரலாறு அதன் சிறப்புகள் பற்றி காணலாம்

கோயில் உருவான வரலாறு 

சிறப்பு வாய்ந்த இந்த உறையூரை பரந்தக சோழன் ஆண்டு வந்த நிலையில் அவனது ராஜகுருவாக சாரமாமுனிவர் இருந்தார். இந்த ராஜகுரு மிகப்பெரிய சிவபக்தரான நிலையில் திருச்சி மலைக்கோட்டையில் ஒரு நந்தவனத்தை உருவாக்கி அதில் தாயுமான சுவாமிக்கு பூஜை செய்து வந்தார். அந்த நந்தவனத்தில் பூக்கப்பட்ட பூக்கள் அனைத்தும் சுவாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நிலையில் மன்னன் பரந்தகச் சோழன் தனது மனைவி புவனமாதேவிக்கு கூந்தலில் கூட அந்த பூக்களை பறித்துச் சென்றான்.

தினமும் அரண்மனை ஆட்கள் வந்து பூக்கள் பறிப்பதை சாரமாமுனிவர் கவனித்தார். தன்னிடம் அனுமதி கேட்காமல் பறித்தது முறையா என நேரடியாக பரந்தகச் சோழனிடமே சென்று கேட்டார். ஆனால் ஆணவம் கொண்ட மன்னன் என்னுடைய ராணிக்கு போக மீதி இருக்கும் பூக்கள் தான் உன்னுடைய இறைவனுக்கு செல்லும் என தெரிவித்துவிட்டார். இதனால் மனம் வருந்திய சாரமா முனிவர் இறைவனிடம் முறையிட்டார். மன்னனின் பேச்சால் கடும் கோபம் கொண்ட இறைவன் கிழக்கு நோக்கி காட்சி கொடுத்த நிலையில் மேற்கு பக்கமாக உறையூரை நோக்கி திரும்பி தனது நெற்றிக்கண்ணைத் திறந்தார்.

இதனால் உறையூர் நகர் மீது நெருப்பு மழை பொழிந்தது. மக்கள் ஊரைவிட்டே பயந்து ஓடினர். மன்னன் இருந்த கோட்டையும் சிதைந்து போனது. வீடுகளை இழந்த மக்கள் நெருப்பு மழையிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக உறையூர் வெக்காளியம்மனிடம் சென்று பிரார்த்தனை செய்தனர். அவர்கள் மீது கருணை கொண்ட அம்மன் தாயுமான சுவாமியின் சினத்தை தணிப்பதற்காக முழு நிலவாக மாறினாள். அன்னையின் குளிர்ந்த பார்வை கண்டு இறைவன் அமைதியாக நெருப்பு மழை நின்றது.

இந்த நெருப்பு மழையில் நிறைமாத கர்ப்பிணையாக இருந்த ராணி புவனமாதேவியும் சிக்கிக்கொண்டாள். அவள் நெருப்பின் உக்கிரம் தாழாமல் காவிரி ஆற்றில் சென்று குதித்தாள். காவிரி வெள்ளம் அவரை இழுத்துச் சென்ற நிலையில் உத்தமச்சேரி என்ற இடத்தில் ஓர் அந்தணர் ராணியை காப்பாற்றி கரை சேர்த்தார். அவளுக்கு கரிகால் பெருவளத்தான் என்ற மகன் பிறந்தான். புவனமாதேவி வெக்காளியம்மனின் பக்தி மற்றும் அவளின் அருள் காரணமாக தான் உயிர் பிழைத்ததால் அந்த உறையூரை காத்த அன்னையை நன்றி பெருக்கோடு இன்றளவு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கோயிலின் சிறப்புகள் 

பொதுவாகவே மேற்கூரை இல்லாத கோயில்களில் இடது காலை மடித்து வலது காலை அசுரன் மீது பதியுமாறு அம்மன் அருள் பாலிப்பாள். ஆனால் இந்த வெக்காளியம்மன் கோயிலில் வலது காலை மடித்து, தனது இடது கால் பாதத்தை அசுரன் மீது வைத்திருப்பது அபூர்வ காட்சியாக உள்ளது. வடக்கு நோக்கிய யோக பீடத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கும் வெக்காளியம்மன் திரிசூலம், உடுக்கை, பாசம் மற்றும் அட்சய பாத்திரம் என நான்கு கரங்களில் பொருட்களை ஏந்தி கொண்டு இருக்கிறாள்.

மேலும் அவள் கழுத்தில் முத்தாரம், திருமாங்கல்யம், அட்டிகை, தலையில் பொன்முடி, கையில் வளையல்கள் ஆகியவை அணிந்திருக்கிறாள். இடுப்பில் யோக பட்டம் கட்டப்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் மனதில் உள்ள குறைகளையும் கோரிக்கைகளையும் சீட்டில் எழுதி வெக்காளியம்மன் முன்புள்ள திரிசூலத்தில் கட்டி விடுகின்றனர். இதன் மூலம் தங்களுடைய குறைகள் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் திருமண தடையும் புத்திர தோஷமும் நீங்குவதற்கு பெண்கள் விளக்கேற்றி இக்கோயிலில் வழிபடுகின்றனர். இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் மகா சர்வ சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது.

மேலும் வைகாசி கடைசி வெள்ளிக்கிழமையில் மாம்பழ அபிஷேகம், நவராத்திரி, தை வெள்ளி, ஆடி வெள்ளி, பங்குனியில் பூச்சொரிதல் விழா சித்திரை மாதம் 5 நாட்கள் திருவிழா ஆகியவை இக்கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.  வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us