குழந்தை வரம்.. பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் சின்ன மாரியம்மன் கோயில்!
Chinna Mariamman Temple: ஈரோடு கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள 150 ஆண்டு பழமையான சின்ன மாரியம்மன் கோயில், குழந்தைகளால் கட்டப்பட்ட கூழாங்கல் கோயிலாகத் தொடங்கி இன்று பெரும் கோயிலாக வளர்ந்துள்ளது. மழை, நோய் விலகவும், குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆடி மாதம், கார்த்திகை மாதத் தேரோட்டம் ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்வுகளாகும்.

பொதுவாக ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு என்பது மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் ஒரு காலமாக பார்க்கப்படுகிறது. பெண் தெய்வங்களின் சக்தி மிகவும் அதிகமாக இருக்கும் இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் பல்வேறு விதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அதேசமயம் நாம் தொடர்ச்சியாக ஆடி மாதத்தில் தமிழ்நாட்டில் பிரபலமான அம்மன் கோயில்களை பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் கருங்கல்பாளையம் பகுதியில் கோயில் கொண்டிருக்கும் சின்ன மாரியம்மன் கோயில் (KarungalPalayam Chinna Mariamman Temple) பற்றி இந்த தொகுப்பில் காணலாம். பொதுவாக மாரியம்மன் தமிழ்நாட்டில் வழிபடக்கூடிய மிக முக்கியமான பெண் தெய்வமாவார். இவர் மழை மற்றும் வெக்கை நோய்களிலிருந்து மக்களை காப்பதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்களை எடுத்துக் கொண்டால் அங்கு நிச்சயமாக ஏதேனும் ஒரு மாரியம்மன் கோயில் இருப்பதை காணலாம். இப்படியான நிலையில் கருங்கல்பாளையத்தில் அமைந்துள்ள இந்த சின்ன மாரியம்மன் கோயிலானது தினமும் காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
Also Read: Kamakshi Amman: ஏலக்காய் மாலை வழிபாடு.. திருமண வரன் அருளும் காமாட்சி அம்மன்!
கோயில் உருவான வரலாறு
பொதுவாக குழந்தை பருவத்தில் குழந்தைகள் பொம்மைகளை கடவுளாக உருவகம் செய்து அலங்காரம் செய்து வழிபடுவதை பார்த்திருப்போம் அது போல் ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி நதிக்கரையில் சிறுவர் சிறுமிகள் சிலர் விளையாட்டாக ஒரு கூலாங்கரை வைத்து விளையாடிய இடம்தான் இன்று சின்ன மாரியம்மன் கோயிலாக மாறியுள்ளது சிறுவர்கள் கட்டிய கோயில் என்பதால் சின்ன என்ற வார்த்தை சேர்ந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயில் அனது 150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கோயிலின் சிறப்புகள்
ஆரம்பத்தில் சிறிய குடிசையில் கூழாங்கல்லை வைத்து அம்மனாக சிறுவர், சிறுமிகள் தரிசனம் செய்து வந்த இந்த கோயில் பின்னாளில் தனியாக கோயில் கட்டி அம்பாள் சிலை பிரதிஷ்டை செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. கோயிலின் வாசலில் அரசமரம் மற்றும் வேப்பமரம் இருப்பது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் நடைபெறும் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி, அதுமட்டுமல்லாமல் பூவோடு சேர்த்து அக்னிகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஆகியவை மிகவும் பிரபலமானது. கார்த்திகை மாதத்தில் தேரோட்டமும் அதன் ஒரு பகுதியாக நடைபெறும் அக்னிகுண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள்.
Also Read:Devi Karumariamman: வேண்டியதை அருளும் தேவி கருமாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
இந்த கோயிலில் குழந்தை இல்லாதவர்கள் வந்து வழிபட்டால் நிச்சயம் அவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் கோயிலில் முன்புறம் இருக்கும் வேப்பமரம் மற்றும் அரச மரத்தில் தொட்டில் கட்டி தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்கள்.
இக்கோயிலில் கொடுக்கப்படும் விபூதியை தலைவலி மற்றும் வயிற்று வலியின் போது நெற்றியில் பூசிக் கொண்டால் விரைவில் நோய் குணமாகும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது அதே சமயம் விபூதியை உண்டால் தீராத நோய்களும் குணமாகும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இங்கிருக்கும் அம்மன் சிலை திருமுருகன்பூண்டியிலிருந்து வடிவமைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.
சின்ன மாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரம் செய்யப்படுவது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும். அதேபோல் ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜையும், வெள்ளிக்கிழமை தோறும் சந்தன மஞ்சள் காப்பு அலங்காரமும் அம்மனுக்கு செய்யப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வழிபடுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)