வாழ்க்கையில் வெற்றி கிடைக்கணுமா.. இந்த 4 விஷயத்தை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!
சாணக்கியரின் வாழ்க்கை நெறிமுறைகள் இன்றைய வாழ்விற்கும் பொருந்தும். வெற்றிக்கான அவரது வழிமுறைகள் நேர மேலாண்மை, நிதானம், தொடர் கற்றல், மற்றும் நல்ல நட்பு ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. நேரத்தை வீணாக்காமல், ஒழுக்கத்துடன் செயல்பட்டு, புதியவற்றைக் கற்றுக்கொண்டு வாழ வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.

வாழ்க்கையில் வெற்றி என்பது மிகப்பெரிய போதையாகும். அது இன்னும் நம்மை சாதிக்க தூண்டும். ஆனால் எல்லா விஷயத்திலும் நாம் வெற்றி பெற முடியுமா என கேட்டால் அதுதான் கிடையாது. தோல்வி நம்மை நிலைகுலைய வைத்தாலும் அது அனுபவத்தை தரும். இதனை பல தத்துவ ஞானிகளும், அறிஞர்களும் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் தான் ஆச்சார்ய சாணக்கியர். அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவராகவும், இந்தியாவின் அறிவின் களஞ்சியமாகவும் கருதப்படுகிறார். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர் வழங்கிய தத்துவங்கள் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தும் என்று பலரும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். அப்படியாக சாணக்கியர் குறிப்பிட்டுள்ள வாழ்க்கை நெறிமுறைகளில், ஒரு நபரின் வெற்றி தொடர்பான பல விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஒரு நபர் வெற்றியை அடைய, அவர்களை வலிமையாகவும், புத்திசாலியாகவும், இலக்கில் கவனம் செலுத்தவும் செய்ய வைக்கும் வகையில் சில பழக்கவழக்கங்கள் உள்ளன. அதனைப் பற்றி நாம் காணலாம்.
அந்த பழக்க வழக்கங்கள் என்னென்ன?
நேரத்திற்கு மதிப்பு கொடுங்கள்: வாழ்க்கையில் எப்போதும் நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் பல வழிகளிலும் முன்னேறுவார்கள் என நம்பப்படுகிறது. ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, நேரம் என்பது வாழ்க்கையில் மிகவும் மதிப்புமிக்க விஷயமாகும். அந்த நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள். ஒவ்வொரு வேலையையும் சரியான நேரத்தில் செய்யத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். நேரத்தை சரியாகப் பயன்படுத்துவது வெற்றிக்கான முதல் படியாகும். அதேபோல் திட்டமிடுதல் என்பது வெற்றிக்கான படியாகும்.
நிதானம்: எப்போது ஒரு செயலை செய்ய அவசரப்படக்கூடாது. நிதானத்தையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்கவும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் ஒழுக்கமும் நிதானமும் இருப்பது மிகவும் முக்கியம். அதனை எப்போதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தனது உணர்ச்சிகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இதனால் ஒருவர் கடினமான காலங்களிலும் சரியான முடிவுகளை எடுக்க முடியும். அத்தகையவர்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனையிலும் தேர்ச்சி பெறுகிறார்கள்.
கற்றுக்கொள்வது: ஒருவர் ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அறிவு மட்டுமே ஒருபோதும் தீர்ந்து போகாத ஒரே சொத்தாகும். படிப்பது, அறிந்து கொள்வது மற்றும் கற்றுக்கொள்வதை பழக்கப்படுத்துபவர்கள், பிறருக்கு கற்றுக்கொடுப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் பிரச்னைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். அறிவு உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
சரியான நட்பு: சரியான நபர்களுடனான நட்புக்கு வாழ்க்கையில் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீங்கள் நல்ல மற்றும் புத்திசாலி மக்களுடன் வாழ்ந்தால், அவர்களின் எண்ணங்களும் பழக்கவழக்கங்களும் உங்களை ஈர்க்கும். கெட்ட சகவாசம் கொண்ட ஒருவருடன் பழகினால் உங்கள் வாழ்க்கை முறையே தலைகீழாக மாறிவிடும். இதனால் வாழ்வில் மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள். எனவே, எப்போதும் நண்பர்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
(சாணக்கிய நிதி அடிப்படையில் கொடுக்கப்பட்ட இந்த தகவல்களுக்கு ஒருபோதும் அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)