Tirupati Temple: திருப்பதியில் வரும் ரூல்ஸ்.. ரீல்ஸ் வீடியோ எடுத்தால் கடும் நடவடிக்கை!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரீல்ஸ் வீடியோக்கள் எடுப்பதைத் தடுக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. கோயிலின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கவும் பக்தர்களின் உணர்வுகளை மதிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் சட்டப்படி வழக்குத் தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரீல்ஸ் வீடியோ எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ளது. உலகின் 2வது பணக்கார கடவுளாக அறியப்படும் இந்த கோயிலுக்கு ஏழை எளிய மக்கள் தொடங்கி உலக அளவிலான தொழிலதிபர்கள் வரை தினசரி வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஆந்திர மாநில அரசு, திருப்பதி தேவஸ்தானம் ஆகியவை இணைந்து பக்தர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி தொடங்கி அடிப்படை வசதிகளை சரியாக நிறைவேற்றி வருகிறது. இப்படியான நிலையில் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பக்தர்களுக்கு எச்சரிக்கை
அதன்படி சமீப காலமாக, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் முன்பும், கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிகும் சிலர் நடனமாடி வீடியோக்கள் எடுத்து அதனை ரீல்ஸ்களாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவது அதிகரித்து வருகிறது. இந்த விஷயம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. திருப்பதி போன்ற புனிதமான ஆன்மீகத் தலத்தில் இதுபோன்ற ஆட்சேபனைக்குரிய மற்றும் அநாகரீகமான செயல்கள் ஏற்கக்கூடியவை அல்ல. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றச்செயலாகும். இதுபோன்ற வீடியோக்களை எடுப்பவர்களை தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் விற்பனை… பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!
வீடியோக்கள் எடுப்பது கோயிலுக்கு வரும் பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் இதுபோன்ற செயலாக அமைந்து விட்டதாகவும், இது ஆன்மீக சூழலை சீர்குலைப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலுன் திருப்பதி பக்தி மற்றும் ஆன்மிக வழிபாட்டிற்கான இடம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அங்கு ஆன்மீக சேவை நடவடிக்கைகள் மட்டுமே இருக்க வேண்டும். கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விதிகளை மீறி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read: கர்வத்தால் திருப்பதியில் நடந்த சம்பவம்.. டிரம்ஸ் சிவமணியின் ஆன்மிக அனுபவம்!
திருப்பதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில வாரங்களாகவே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. இதனால் தரிசனம் செய்ய குறைந்தது 15 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக விடுமுறை தினங்கள், கோடை காலங்களில் தான் இது போன்ற கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் தற்போது பள்ளி கல்லூரிகள் திறந்து வழக்கமான வேலை நாட்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதேசமயம் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்டுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டு சில மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இதன் காரணமாக பொது தரிசனத்தில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதால் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.