Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கர்வத்தால் திருப்பதியில் நடந்த சம்பவம்.. டிரம்ஸ் சிவமணியின் ஆன்மிக அனுபவம்!

இசைத்துறையில் தனக்கென தனியிடம் பிடித்திருக்கும் டிரம்ஸ் சிவமணி தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார். அதில் திருப்பதி கோயிலுக்கு தான் சென்றபோது நடந்த நிகழ்வுகளையும், தன்னிடம் இருந்த கர்வம் ஒழிந்தது பற்றியும் பிரமிப்புடன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாபாஜியிடம் வேண்டியது நடந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

கர்வத்தால் திருப்பதியில் நடந்த சம்பவம்.. டிரம்ஸ் சிவமணியின் ஆன்மிக அனுபவம்!
டிரம்ஸ் சிவமணி
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 07 May 2025 09:49 AM

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இசையின் மூலம் நன்கு பரீட்சையமானவர் டிரம்ஸ் சிவமணி (Drums Sivamani). இவர் ஆன்மிகத்தில் மிகப்பெரிய நம்பிக்கையுடையவர். இவர் நேர்காணல் ஒன்றில் திருப்பதி பெருமாள் (Tirupati Perumal) மற்றும் இமயமலையில் பாபாஜியால் (Babaji) நிகழ்ந்த அற்புத தருணங்கள் பற்றி பிரமிப்புடன் பேசியிருப்பார். அதனைப் பற்றிக் காணலாம். அதாவது, “எனக்கு மனதிற்கு நெருக்கமான கோயில் என்றால் அது திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் தான். அந்தக் கோயிலுக்கு என்று மிகப்பெரிய சக்தி உள்ளது. திருப்பதி செல்கிறேன் என சொல்லிவிட்டால் உடனே சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு எதிராக இரு மடங்கு ஏதாவது நடக்கும். இதனை பல நேரங்களில் அனுபவித்திருக்கிறேன். திருப்பதி கோயிலுக்கு நடந்து சென்றிருக்கிறேன். அங்கு இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறேன். அதனால் எனக்கு மிகவும் பிடித்தமான இடமாக திகழ்கிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும், “பாலு அண்ணாவின் குழுவில் இணைந்த பிறகு நானும் எனது நண்பன் ராஜாவும் இணைந்து திருப்பதி கோயிலுக்கு சென்றோம். போகும்போது அவர் எங்களுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்துவிட்டார். நாங்களும் எங்களை யாரும் எதுவும் சொல்ல முடியாது.  நாங்கள் தான் சிபாரிசு கடிதம் வைத்திருக்கிறோமே என்ற மமதையில் திருப்பதிக்கு சென்றோம்.  அங்கு ஒரு சிறுவன்  5 ரூபாய் கொடுத்தால் சாமி பார்த்த அழைத்து செல்வதாக கூறினான். அவன் நடந்து கொண்ட விதம் வித்தியாசமாக இருந்தது. அந்த சிறுவனை சமாளித்து சிபாரிசு கடிதம் கொடுக்க வேண்டிய இடத்திற்கு சென்றால் இங்கு அதிகாரி இல்லை.

பெருமாளால் அழிந்த கர்வம்

என்ன செய்வதென்று தெரியாமல் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் வரிசையில் இருந்து சாமி தரிசனம் செய்தோம். திரும்பி வரும்போது கோயிலின் வாசல் அருகே நாங்கள் யாரிடம் அந்த கடிதம் கொடுக்க வேண்டுமோ அவர் அங்கு நின்று கொண்டிருக்கிறார். அவரிடம் விஷயத்தை சொன்னபோது நீங்கள் வந்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் நான் கோயிலினுள் ஒரு மீட்டிங்கில் மாட்டிக் கொண்டேன் என தெரிவித்தார். அப்போதுதான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. சிபாரிசு கடிதம் கிடைத்தவுடன் தான் எனக்குள் கர்வம் வந்ததை நினைத்து வருத்தப்பட்டேன். எளிமையாகவும் அனைவரிடத்திலும் மரியாதையாகவும் நடக்க வேண்டும் என்பதை திருப்பதி பெருமாள் அன்று எனக்கு கற்றுக் கொடுத்தார்” என தெரிவித்தார்.

பாபாஜியால் நடந்த அதிசயம்

இதேபோல், “ரஜினி நடித்த பாபா படத்தில் நான் பணியாற்றியிருந்தேன். அந்த படத்தில் பாபாஜி சுவாமிகள் பற்றியும், அவர் கொடுக்கும் மந்திரங்கள் பற்றியும் ரஜினி தெரிவித்திருப்பார். நான் ஒரு குரு பௌர்ணமி அன்று இமயமலை அடிவாரத்தில் இருக்கும் மானசரோவர் ஏரியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பாபா படத்தில் உங்களைப் பற்றிய பல விஷயங்களை தெரிந்து கொண்டேன். நீங்கள் எனக்கு இந்த மலையில் காட்சி கொடுக்க வேண்டும் என பாபாஜியிடம் வேண்டிக் கொண்டேன்.

மறுநாள் மலையை சுற்றி கிரிவலம் வந்துவிட்டு கிளம்பி விட்டேன். போகும் வழியில் மாலை 5.30 மணி இருக்கும். ஓரிடத்தில் நீண்ட தலை முடியுடன் ஒருவர் நிற்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் காரை நிறுத்துமாறு தெரிவிக்கிறேன். நான் உடல் உபாதைக்காக  நிறுத்த சொல்கிறேன் என நினைத்து எனது கார் ஓட்டுநர் வேறு இடத்தில் காரை நிறுத்துகிறேன் என தெரிவிக்கிறார். உடனே நான் திரும்பிப் பார்க்கிறேன் அந்த இடத்தில் யாருமே இல்லை. அந்த நபரின் முகத்தில் இருந்த ஒரு உணர்வுகளை வேறு எங்கேயும் பார்த்ததில்லை. அப்போதுதான் ஒன்றை புரிந்து கொண்டேன் நான் பாபாவை பார்க்க வேண்டும் என நினைத்து வேண்டியது தற்போது நடந்து விட்டது என நினைத்துக் கொண்டேன்” என டிரம்ஸ் சிவமணி தெரிவித்துள்ளார்.