பிரிந்த தம்பதிகளை ஒன்று சேர்க்கும் அர்த்தநாரீஸ்வரர் கோயில்!
சிந்தாமணிநாதர் கோயில், வாசுதேவநல்லூரில் அமைந்துள்ளது. இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலை, சிவன் மற்றும் பார்வதியின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. கோயிலின் வரலாறு, பிருங்கி மகரிஷி மற்றும் ரவிவர்மன் மன்னனுடன் தொடர்புடையதாகும். புத்திர பாக்கியம் வேண்டி பலர் இங்கு வந்து செல்கிறார்கள். இந்த கோயில் பற்றி காணலாம்.

சிவனும் பார்வதியும் இணைந்த வடிவத்திற்கு அர்த்தநாரீஸ்வரர் என்பது பெயராகும். இது ஆண் மற்றும் பெண் தன்மையின் ஒருங்கிணைப்பை குறிப்பதாக அமைந்துள்ளது. சைவ சமயத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது. இதில் சிவன் வலது புறமாகவும், பார்வதி இடது புறமாகவும் அமைந்திருக்கின்றனர். ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் வெளிக்காட்டுவதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அமைந்திருக்கும் சிந்தாமணி நாதர் கோயில் பற்றிப் பார்க்கலாம். இக்கோயிலில் தாயாராக இடபாகவல்லி காட்சிக் கொடுக்கிறார். இந்த கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் உருவான வரலாறு
மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி சிவனை மட்டுமே வணங்கி வந்தார். சிவன் வேறு சக்தி வேறு என்ற எண்ணம் அவரிடம் இருந்ததால் இப்படி செய்து வந்தார். பார்வதி தேவி பிருங்கி மகரிஷிக்கு உண்மையை உணர்த்துமாறு சொல்லியும் சிவன் கேட்கவில்லை. எனவே அவள் சிவனைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்தாள். ஒரு புளிய மரத்தின் அடியில் தவம் இருந்த நிலையில் அவளுக்கு காட்சி கொடுத்த சிவன் தன்னுள் ஏற்றுக்கொண்டு அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்தார்.
இந்த அர்த்தநாரீஸ்வரரை சிந்தாமணி நாதர் என அழைக்கின்றனர். அதேசமயம் இப்பகுதியை ஆண்டு வந்த சிவ பக்தியுடைய ரவிவர்மன் என்ற மன்னனின் மகனான குலசேகரனுக்கு தீராத நோய் இருந்தது. தன் மகன் குணமடைய வேண்டி சிவபெருமானை வேண்டினான் ரவிவர்மன். ஒருநாள் அவனை சந்தித்த சிவனடியார் ஒருவர், இந்த கோயில் சிவனிடம் வேண்டினால் நோய் நீங்கும் என தெரிவிக்க, மன்னனும் அவ்வாறு வந்து வணங்க மகனின் நோய் குணமானது. இதனால் அர்த்தநாரீஸ்வரருக்கு பெரிய அளவில் கோயில் கட்டினான்.
கோயிலின் சிறப்புகள் என்னென்ன?
அர்த்தநாரீஸ்வரரின் தலையில் கங்கை இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. வலது பக்கம் சிவனுக்குரிய பிறையும், இடது பக்கம் அம்பாளுக்குரிய ஜடையும் இருக்கிறது. சிவனின் பக்கத்தில் உள்ள கரங்களில் சூலம், கபாலம், மற்றும் காதில் தாடங்கம் ஆகியவை உள்ளது. அம்பாள் பகுதியுள்ள கைகளில் அங்குசம், பாசம், பூச்செண்டு மற்றும் காதில் தோடு உள்ளது. சுவாமி பகுதியில் காலில் தண்டமும், அம்பாள் பகுதி காலில் கொலுசும் இருக்கிறது.
Also Read: Pachaiamman: பிரச்னையே வாழ்க்கையா இருக்கா? – தீர்வு தரும் பச்சையம்மன் கோயில்!
சுவாமி பாகத்திற்கு வேஷ்டியும் அம்பாள் பாகத்திற்கு சேலையும் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது. இடது பக்கம் வீற்றிருக்கும் அம்பாள் பகுதியானது இடவாகவல்லி என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் உற்சவரராக பிருங்கி மகரிஷி இருக்கிறார். ஆனி பிரம்மோற்சவம் விழாவின் போது பிருங்கி மகரிஷி சிவன் மற்றும் அம்பாள் வைக்கப்படும் இடத்தில் சிவனை மட்டும் வழிபடும் வகையில் நிகழ்ச்சி செய்வார்கள்.
இதனால் பார்வதி தேவி கோபமடைவது போலவும் சிவன் அர்த்தநாரியாக அம்பாளை ஏற்படுவது போலவும் சடங்குகள் செய்யப்படுவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள கருப்பை ஆறு என அழைக்கப்படும் நதியில் நீராடினால் விரைவில் நல்ல செய்தி கேட்பீர்கள் என்பது ஐதீகமாக உள்ளது. இது பிற்காலத்தில் கருப்பா நதி என அழைக்கப்பட்டு வருகிறது.
புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்ற இன்னொரு பெயர் உண்டு. இந்த கோயிலாஆனது புளிய மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் அமைந்திருப்பதால் இந்த இறைவனுக்கு சிந்தாமணி நாதர் என பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் விருட்சமும் புளிய மரம்தான் ஆகும். பிரிந்து இருந்த தம்பதியினர் இக்கோயிலில் வந்து வேண்டிக் கொண்டால் மீண்டும் இணைவார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
Also Read: Vekkaliyamman Temple: நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
மேலும் இக்கோயிலில் நாய் வாகனம் இல்லாத பைரவர், சந்தன நடராஜர், யோக சண்டிகேஸ்வரர், சூரியன், யோக தட்சிணாமூர்த்தி, வீரபத்திரர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, சப்த மாதர், ஜூர தேவர், சித்தி விநாயகர், சனீஸ்வரர், நாகராஜா மற்றும் நாகராணி ஆகியோரும் காட்சி கொடுக்கின்றனர். இந்த கோயிலில் ஆனியில் பிரம்மோற்சவம் மற்றும் கந்தசஷ்டி, மார்கழி திருவாதிரை, தை அமாவாசை ஆகிய பண்டிகைகள் விமர்சையாக கொண்டாடப்படும். வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு வளங்களை பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)