Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coonoor: வாழ்க்கை பிரச்னைகளை போக்கும் தந்தி மாரியம்மன் கோயில்!

நீலகிரி மாவட்டம் கூன்னூரில் உள்ள மேல்கடை வீதியில் அமைந்துள்ள தந்தி மாரியம்மன் கோயில், ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகும். சிறுமியாக தோன்றிய அம்மன், சுயம்புவாக இங்கு வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது. மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கும் இங்கு வருகை தந்து பிரார்த்தனை செய்கின்றனர்

Coonoor: வாழ்க்கை பிரச்னைகளை போக்கும் தந்தி மாரியம்மன் கோயில்!
தந்தி மாரியம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 12 Aug 2025 13:34 PM

ஆடி மாதத்தில் நாம் திரும்பும் திசையெங்கும் தெய்வீக மணம் வீசி வருகிறது. அனைத்து அம்மன் கோயில்களிலும் வழிபாடு, திருவிழா என கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் பிரபலமாக திகழும் அம்மன் கோயில்கள் பற்றி நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அமைந்திருக்கும் தந்தி மாரியம்மன் கோயில் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். இந்த மாரியம்மன் கோயில் ஆனது குன்னூரில் உள்ள மேல்கடை வீதியில் அமைந்திருக்கிறது. குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கும் இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மே மாதம் வரை திருவிழா நடைபெறுவது விசேஷமானது.

இந்தக் கோயிலானது தினமும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4:30 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலானோர் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு செல்கின்றனர். அப்படியான தந்தி மாரியம்மன் கோயில் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி பார்ப்போம்.

கோயில் உருவான வரலாறு

முற்காலத்தில் இந்தப் பகுதியானது அடர்ந்த வனமாக இருந்தது. இதனை சீரமைத்த ஆங்கிலேயர்கள் குதிரை லாயங்கள் மற்றும் சாரட் வண்டி கூடாரங்கள் நிற்கும் இடமாக பராமரித்து வந்தனர். இவற்றை கண்காணிக்க காவலாளிகளும் நியமிக்கப்பட்டனர். அப்படியான நிலையில், ஒருமுறை காவலாளி ஒருவர், இரவு நேரத்தில் எதேச்சையாக வெளியே வந்த போது அருகில் இருந்த ஒரு மரத்தில் ஊஞ்சலில் வெள்ளையாக ஒரு உருவம் ஒன்று ஆடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உற்று நோக்கிய போது அங்கு ஒரு சிறுமி பட்டாடையும், கண்களைப் பறிக்கும் நகைகளையும் அணிந்திருப்பதை பார்த்தார். மறுநாள் இந்த தகவலை அப்பகுதி மக்களிடம் கூறினார்.ஆனால் காவலாளி சொல்வதை யாரும் நம்பவில்லை. இதனை நிரூபிக்க இரவு தன்னுடன் இருக்குமாறு தெரிவிக்க, மக்களும் ஒளிந்து நின்று அந்த காட்சியை கண்டு அதிசயித்துப் போயினர். பின்னர் ஒரு பக்தரின் கனவில் மாரியம்மன் தோன்றி அந்த மரத்தின் அடியில் சிறுமியாக இருப்பது தான் என்றும், சுயம்புவாக அங்கு வீற்றிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதன் பின் மக்கள் சிலையை வெளியே எடுத்து அம்பிகைக்கு கோயில் கட்டி வழிபட்டுள்ளனர்.

Also Read:  திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!

கோயிலின் சிறப்புகள் 

இந்த கோயில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட நிலையில் அங்கு தந்தி கம்பம் ஒன்றினை நட்டு வைத்தனர். அதனால் ஆரம்பத்தில் இருந்தே இந்த மாரியம்மன் தந்தி மாரியம்மன் என அழைக்கப்பட்டு பிற்காலத்தில் அந்தப் பெயரை நிலைத்து நின்றுவிட்டது. அன்று வைக்கப்பட்ட தந்தி கம்பம் இன்றுவரை அப்படியே உள்ளது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு வழிபாடு நடைபெறும் போது தந்தி கம்பத்திற்கும் கற்பூர தீபாரதனை காட்டப்படுகிறது.

தந்தி மாரியம்மனை மனம் உறங்கி வேண்டினால் தண்ணீர் பஞ்சம் இருக்காது என நம்பப்படுகிறது. இந்த மாரியம்மன் கோயில் பிரகாரத்தில் கருமாரியம்மன், காமாட்சி அம்மன், வனபத்ரகாளி, வனதுர்க்கை, காத்தாயி அம்மன், முருகன் ஆகியோர் சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.

இக்கோயிலில் அம்பாள் ஊஞ்சலாடியாக கூறப்படும் மரம் இப்போதும் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். சித்திரை மாதம் 27 நாட்கள் திருவிழா இந்த கோயிலில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமை, நவராத்திரி, திருக்கார்த்திகை, தீபாவளி, பொங்கல், ஒவ்வொரு மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களில் விசேஷ வழிபாடானது நடைபெறுகிறது.

Also Read:  ஏலக்காய் மாலை வழிபாடு.. திருமண வரன் அருளும் காமாட்சி அம்மன்!

திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி, வீட்டில் செல்வ வளம் பெருக, மழைப்பொழிவு இருக்க, கல்வி வளர்ச்சி, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் பொதுமக்கள் வந்து பிரார்த்தனை மேற்கொள்கின்றனர். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்பாளுக்கு அவல், தேங்காய்ப்பூ மற்றும் சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து புடவை சாற்றி பூக்குண்டம் இறங்கி வழிபடுகின்றனர். வாய்ப்பு இருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று இந்த தந்தி மாரியம்மனை  வணங்கி பலன் பெறுங்கள்.

(ஆன்மிகம் மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)