மதுரையின் காவல் தெய்வம்.. வண்டியூர் மாரியம்மன் கோயில் சிறப்புகள்!
வண்டியூர் மாரியம்மன் கோயில், மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் அருகே அமைந்துள்ள 800 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலாக உள்ளது. பாண்டிய மன்னர் கூன் பாண்டியன் காலத்தில் உருவான இக்கோயிலில் மாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மன் மூலவர்களாக உள்ளனர். இங்கு நடைபெறும் தெப்பத் திருவிழா புகழ்பெற்றது.

தமிழ்நாடு மிகப்பெரிய ஆன்மீக பூமி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். சங்க காலம் தொடங்கி தற்போதைய காலம் வரை ஏராளமான மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் இயங்கி வருகின்றன. மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் சென்று வழிபடுகின்றனர். இப்படியான நிலையில் மதுரை மாவட்டத்தில் தெப்பக்குளம் அருகே வீற்றிருக்கும் வண்டியூர் மாரியம்மன் கோயிலின் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயிலில் மாரியம்மன் மற்றும் பேச்சியம்மன் ஆகியோர் மூலவராக அருள்பாலிக்கின்றனர். உற்சவராக மாரியம்மனுடன் துர்க்கை அம்மன் இருக்கும் நிலையில் இந்தக் கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். தெப்பக்குளம் பகுதி சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருப்பதால் இந்த மாரியம்மன் கோயிலுக்கு தினந்தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கிறது.
கோயில் உருவான வரலாறு
800 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை நகரை கூன் பாண்டியன் மன்னன் ஆட்சி செய்து வந்தான். அப்போது மதுரையின் கிழக்கே தற்போது கோயில் இருக்கும் பகுதியில் மகிழ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இந்த இடத்தை குறும்பர் இனத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியை அழித்து வந்தனர். நாளுக்கு நாள் அவர்களின் தொல்லை அதிகமாகவே ஒரு நாள் இப்பொகுதிக்கு வந்த கூன் பாண்டியன் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து விரட்டி அடித்தார். பின்னர் தனது வெற்றியினை கடவுளுக்கு சமர்ப்பித்து வணங்க வைகையில் கிடைத்த அம்மனை தெற்கு கரையில் தற்போது கோயில் இருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இப்படியாக வண்டியூர் மாரியம்மன் கோயில் உருவானது.
Also Read: Esakki Amman Temple: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!
கோயிலின் சிறப்புகள்
ஒருமுறை ஜமதக்னி மகரிஷி மனைவியான ரேணுகாதேவி தண்ணீர் எடுக்க சென்றபோது அந்த வழியாக சென்ற கந்தர்வனின் அழகை கண்டு ஆச்சரியமடைந்தாள். இதனை கேள்விப்பட்ட ஜமதக்னி மனைவியின் பத்தினி தன்மைக்கு களங்கம் ஏற்பட்டதாக கூறி தனது மகன் பரசுராமனை கொண்டு அவளது தலையை வெட்டினார். அதன் பின் பரசுராமன் தன் தன் சாமர்த்தியத்தால் தாயை உயிர்ப்பித்தார. அந்தத் தாயே மாரியம்மனாக உருவானதாக சொல்லப்படுகிறது.
அதேபோல் யட்ச குலத்தில் பிறந்த மகிஷாசுரன் என்ற அசுரனை அழிப்பதற்காக தன் சக்தியில் இருந்து ஒரு மாய சக்தியை பராசக்தி தோற்றுவித்தாள். அந்த சக்திக்கு சிவன் சக்தி கொடுக்க அது முகமாக மாறியது. பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமாலின் சக்தி 18 கைகளாகவும், எமதர்மனின் சக்தி கூந்தலாகவும், அக்னி பகவான் கண்ணாகவும் உருமாற்றம் பெற்றது. அதேபோல் மன்மதனின் சக்தி புருவமாகவும், குபேரனின் சக்தி மூக்காகவும், இந்திரனின் சக்தி இடையாகவும், சந்திரனின் சக்தி கண்களாகவும், முருகனின் சக்தி உதடாகவும், வருணனின் சக்தி கால்களாகவும் இணைந்த அம்பிகையாக துர்க்கை உருவெடுத்தாள்.
மகிஷாசுரனை போட்யிட்டு வென்றதால் இவரை மகிஷாசுரமர்த்தினி என அழைக்கிறார்கள். மாரியம்மனும் துர்க்கையும் வெவ்வேறு வடிவங்களாக இருந்த போதும் இருவரும் அம்பிகையே அம்சமாக திகழ்கின்றனர். இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் மாரியம்மன் மற்றும் துர்க்கையை நாம் வழிபடலாம்.
Also Read: அனைத்து வளங்களையும் அருளும் தையல்நாயகி அம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
புகழ்பெற்ற தெப்ப திருவிழா
வைகை நதியின் ஒரு கரையில் வண்டியூரின் மேல் மடைக்கு நேர் எதிராக இந்தக் கோயில் மிகுந்த கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இன்று வரை கோயிலில் நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். அன்று ஒரு நாள் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைக்கப்படுகிறது.இந்தக் கோயிலில் மூலவரான அம்பிகைக்கு செய்யப்படும் அபிஷேகம் தீர்த்தத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கிறார்கள். கண் பாதிப்புகள், அம்மை நோய் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து தீர்த்தம் வாங்கி செல்கின்றனர்.
இந்த தீர்த்தத்தை பருகினால் நோய்கள் நீங்குவதாக நம்பிக்கை உள்ளது. மேலும் தோல் வியாதி இருப்பவர்கள் உப்பு நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டிக்கொண்டால் அவை விரைந்து குணமாகும் என சொல்லப்படுகிறது. மேலும் எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கை அம்மனையும் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
அதனால் இந்த கோயில் நோய் தீர்க்கும் தலம் என்ற பெருமை உடையதாக விளங்குகிறது. இக்கோயிலில் அம்பாள் பிரதானம் என்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. அங்கிருக்கும் அரச மரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சி அம்மன் அருள் பாலிக்கின்றனர். இந்த வண்டியூர் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைத்து குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்பதை நம்பிக்கையாகும்.
மேலும் திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சனைகளும் விரைந்து சரியாகும் என சொல்லப்படுகிறது. மதுரையின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் இந்த மாரியம்மனிடம் இப்பகுதி மக்கள் எந்த விசேஷங்கள் நடத்தினாலும் உத்தரவு கேட்டுவிட்டு தான் நடத்துகிறார்கள். அந்த அளவுக்கு மிகவும் முக்கியமான ஒரு அம்மனாக பார்க்கப்படுகிறாள். தைப்பூச தினத்தில் தெப்பத் திருவிழாவும், பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் பிரம்மோற்சவமும் முக்கிய திருவிழாக்களாக உள்ளது.
தெப்பத் திருவிழாவின் போது மீனாட்சியம்மனை இங்குள்ள தெப்பத்தின் நடுமண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. வாய்ப்பிருந்தால் நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)