பித்ரு தோஷத்தை போக்கும் சீனிவாச பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
Dindigul Srinivasa Perumal Temple: திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்த சீனிவாச பெருமாள் கோயில், வைணவ சமயத்தின் முக்கியத் தலமாகும். மகாவிஷ்ணுவின் அருளால் உருவான இந்தக் கோயிலில், சீனிவாச பெருமாள், அலமேலு மங்கை, மற்றும் பிற தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். பித்ரு தோஷ நிவர்த்தி, மாங்கல்ய தடை நீக்கம் போன்றவற்றுக்கு இக்கோயில் பிரசித்தி பெற்றது.

பொதுவாக இந்து சமயத்தின் மூன்று முக்கிய தெய்வங்களில் ஒன்றாக விஷ்ணு திகழ்கிறார். பிரபஞ்சத்தை காக்கும் தொழில் செய்யும் இவர் எங்கும் நிறைந்திருப்பவர் என்பதால் விஷ்ணு என்ற சொல்லுக்கு சர்வ வியாபி என்ற அர்த்தமும் உண்டு. இந்த விஷ்ணு வைணவ சமயத்தின் முழு முதல் கடவுளாக கருதப்படுகிறார். தர்மத்தை காப்பதற்கும் தீமைகளை அளிப்பதற்கும் திருமாலான விஷ்ணு பல்வேறு அவதாரங்களை எடுத்துள்ளதாக புராணத்தை சொல்லப்பட்டுள்ளது. அப்படியான விஷ்ணுவுக்கு பெருமாள் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பெருமாள் பல இடங்களில் பல்வேறு பெயர்களில் பல்வேறு காரணங்களுக்காக கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளார். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வங்கள்
இந்த கோயில் ஆண்டு தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8:30 மணி வரையும், பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்த கோயிலில் பெருமாள் சீனிவாச பெருமாள் என்ற பெயருடன் அருள்பாலிக்கிறார். மேலும் தாயாராக அலமேலு மங்கையும், உற்சவரராக கல்யாண சீனிவாசரும் காட்சி கொடுக்கின்றனர். மேலும் இந்த கோயிலில் நவநீதகிருஷ்ணர், தாமோதர விநாயகர், நவகிரக சன்னதிகள், நம்மாழ்வார், இராமானுஜர், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகிலேயே கோட்டை மாரியம்மன், அபிராமி கோயில் ஆகியவையும் அமைந்துள்ளது.
Also Read: திருமால் வழிபட்ட தலம்.. இந்த சிவன் கோயில் தெரியுமா?




கோயில் உருவான வரலாறு
மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைப்பதற்காக பெருமாள் அடியார்கள் சிலர் இந்த கோயில் இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் யாகம் நடத்தினர். அப்போது அரக்கன் ஒருவன் அவர்களை தொந்தரவு செய்து வந்தான். அந்த யாகம் தடையின்றி நடக்க அசுரனை அழித்து அருளும்படி அடியார்கள் பெருமாளிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று அசுரனை அளித்த பெருமாள் யாகம் தடையின்றி நடக்க அருளினார்.
அப்போது பெருமாள் மிகவும் உக்கிரமாக இருந்தார். அவரது உக்கிரத்தை தணிக்க மகாலட்சுமியை அடியார்கள் வேண்டினர். அதன்படி மகாலட்சுமி சுவாமியை சாந்தப்படுத்தினார். பின்னர் இருவரும் அங்கேயே எழுந்தருளினர். பிற்காலத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பெருமாளுக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் சீனிவாசர் என்ற திருநாமம் பெற்றார்.
Also Read: வாழ்க்கை செழிக்கும்.. இந்த லட்சுமி குபேரர் கோயில் தெரியுமா?
கோயிலின் சிறப்புகள்
திண்டுக்கல் மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த கோயில் மகாலட்சுமி அம்சமாக கருதப்படுகிறது. அதனால் இத்தலத்தின் விருச்ச மரமாக நெல்லி உள்ளது. இந்த கோயிலில் பித்ரு தோஷ நிவர்த்தி மற்றும் மாங்கல்ய தடை விலக சுவாமிக்கு நெல்லி இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கு பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. மேலும் சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி குடகனாற்றில் இறங்குவார்.
சுவாமிக்கு வலப்புறம் தாயார் அலமேலு மங்கை, இடதுபுறம் ஆண்டாள் ஆகியோர் இருவரும் தனித்தனி சன்னதியில் காட்சி கொடுக்கின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் தாயார் சன்னதியில் கோ பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் பால் மற்றும் மஞ்சள் பிரசாதமாக கொடுக்கப்படும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக நீண்ட காலத்திற்கு இருப்பார்கள் என்பது நம்பிக்கையாகும்.
மேலும் கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். அதேபோல் ஆண்டாளின் பெருமையை உணர்த்தும் விதமாக மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் சன்னதியில் விளக்கு பூஜை நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கோயிலில் சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. இவரது சிலையை சுற்றிலும் பெருமாளின் தசாவதார சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பான ஒன்றாகும்.
அதே போல் நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தி இருக்கும் நரசிம்மருக்கு கீழே நாகம் இருக்கிறது. இந்த நரசிம்மரை சுற்றி அஷ்டலட்சுமிகள் இருக்கின்றனர். இந்த தரிசனம் கிடைப்பது மிகவும் அபூர்வமாக பார்க்கப்படுகிறது. மேலும் கோயிலின் பிரகாரத்தில் உள்ள அபய ஆஞ்சநேயர் சிலையின் வாலானது அவரது இரு பாதத்திற்கு நடுவில் இருக்கும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாலில் நவகிரகங்கள் வசிப்பதால் கிரகங்கள் தொடர்பான தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.