Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Eachanari Vinayagar: தடைகளை நீக்கும் ஈச்சனாரி விநாயகர் கோயில்.. மிஸ் பண்ணாதீங்க!

ஈச்சனாரி விநாயகர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயமாக திகழ்கிறது. மதுரையில் இருந்து பேரூர் நோக்கி சென்ற விநாயகர் சிலை, கோயில் அமைந்துள்ள இடத்தில் வண்டியின் அச்சு முறிந்ததால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களுக்கான அலங்கார பூஜை சிறப்பான ஒன்றாகும்.

Eachanari Vinayagar: தடைகளை நீக்கும் ஈச்சனாரி விநாயகர் கோயில்.. மிஸ் பண்ணாதீங்க!
ஈச்சனாரி விநாயகர் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 20 Aug 2025 13:48 PM

விநாயகப்பெருமான் முழு முதற்கடவுளாக இந்து மதத்தில் அறியப்படுகிறார். அவரை வணங்காமல் நாம் எந்தவொரு காரியத்தையும் தொடங்குவதில்லை. விநாயகரை வணங்கினால் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளும் விஷயத்தில் இருக்கும் தடைகள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கையாகும். அதனால் திரும்பும் திசையெங்கும் விநாயகர் கோயில்களை காணலாம். அப்படியாக கோயம்புத்தூர் மாவட்டம் ஈச்சனாரியில் அமைந்துள்ள விநாயகர் கோயில் பற்றி காணலாம். கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த கோயில் சுற்றுவட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்றது. இக்கோயிலில் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஈச்சனாரி விநாயகர் கோயிலானது காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும். இந்த விநாயகர் கோயில் சிறப்புகள் பற்றிக் காணலாம்.

தல வரலாறு

பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயிலானது மேலை சிதம்பரம் என அழைக்கப்படுகிறது இந்த கோயிலுக்கு பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட விநாயகர் விக்ரகம் ஒன்று மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. வழியில் தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தில் வண்டியின் அச்சு முறிந்ததாகவும், பின்னர் அதனை சரி செய்து பேரூர் எடுத்துச் செல்ல முயன்ற போது அது முடியாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னர் காஞ்சி சங்கராச்சாரியார் அருள் வாக்குப்படி அந்த சிலை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தற்போது ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில் ஆக எழுந்தருளியுள்ளது என வரலாறு தெரிவிக்கிறது.

Also Read: Esakki Amman Temple: திருமண தடை நீக்கும் முப்பந்தல் இசக்கியம்மன் கோயில்!

கோயிலின் சிறப்புகள்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற விநாயகர் திருத்தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இந்த விநாயகர் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யும் நட்சத்திர அலங்கார பூஜை மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. திருக்கோயிலில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால், பன்னீர்,சந்தனம், குங்குமம், மலர் மற்றும் மின்கட்டணம் ஆகியவை முதற்கொண்டு கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தல விநாயகரை மனமுருகி வேண்டினால் எடுத்த காரியம் அனைத்திலும் தடங்கல் இல்லாமல் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் தங்களது கல்விகளில் சிறந்து விளங்குவதற்காக இக்கோயிலுக்கு வருகை தந்து வேண்டிக் கொள்கின்றனர். அது மட்டுமல்லாமல் வியாபார விருத்தி, பதவி உயர்வு போன்றவை வேண்டியும் இந்த விநாயகரை வணங்குகிறார்கள்.

Also Read: Milagu Pillayar: மழை வேண்டி மிளகு அரைத்து வழிபாடு.. இந்த பிள்ளையார் கோயில் தெரியுமா?

இந்த ஈச்சனாரி விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காக சிதறு தேங்காய் போடுதல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாற்றுதல், பாலபிஷேகம் செய்தல், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது, திருப்பணிகளுக்கு பொருள் உதவி செய்வது போன்ற பல்வேறு காரியங்களை செய்கின்றனர். இக்கோயிலில் ஆவணி மற்றும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை, பௌர்ணமி ,சதுர்த்தி, அமாவாசை, ஆகிய திதிகளும் வருடப்பிறப்பு, தீபாவளி, பொங்கல், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி ஆகியவை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)