Ganesh Chaturthi 2025: விநாயகர் சதுர்த்தி எப்போது? – அதன் வரலாறு தெரிஞ்சுகோங்க!
விநாயகர் சதுர்த்தி, ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படும் முக்கியமான இந்து மத பண்டிகையாகும். இது இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமூக ஒருமைப்பாடு மற்றும் கலாச்சார பரிமாற்றத்தையும் இது ஊக்குவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. விதவிதமான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இந்நாளில் வழிபடுவார்கள்.

விநாயகர் (Lord Vinayagar) இந்து மதத்தில் முழுமுதற் கடவுள் ஆக அறியப்படுகிறார். நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் விநாயகரை வணங்காமல் செய்வது இல்லை. திரும்பும் திசை எங்கிலும், அல்லது ஏதேனும் கோயிலுக்கு சென்றாலும் அங்கு நம்மை முதலில் வரவேற்பவர் விநாயகர் தான். இப்படிப்பட்ட விநாயகர் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) என்ற பெயரில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது ஆவணி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி திதியில் கடைபிடிக்கப்படுகிறது. அப்படியாக 2025 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. இந்த விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பண்டிகையாக பார்க்கப்படுகிறது. ஊரெங்கும் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு பின்னர் நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. இப்படியான நிலையில் விநாயகர் உருவான வரலாறு பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
விநாயகர் உருவான வரலாறு
புராணங்களின்படி ஒரு நாள் குளிக்க சென்ற பார்வதி தேவி தன்னுடைய காவலுக்கு யாரும் இல்லாத காரணத்தால் தான் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்து காவலுக்கு நிற்குமாறு கூறினார். மேலும் உள்ளே யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தார். அப்போது அங்கே வந்த சிவபெருமான் அந்த சிறுவனால் தடுத்து நிறுத்தப்பட கோபமடைந்த அவர், அந்த சிறுவனின் தலையை துண்டித்தார்.
Also Read: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.. சிலைகள் கரைக்க புதிய விதிமுறைகள்..
அதன் பின்னர் தான் அச்சிறுவன் பார்வதியின் மைந்தன் என்பது சிவபெருமான் அறிந்தார். தன்னுடைய பூதக்கணங்களை அழைத்து முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்து வருமாறு கூறினார். அதன்படி பூதகணங்கள் முதலில் பார்த்தது ஒரு யானையை பார்த்தனர். சிவபெருமானின் உத்தரவுப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்து வந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார்.
அப்போது வெளியே வந்த பார்வதி யானை முகத்துடன் சிறுவன் இருப்பதை கண்டு பிள்ளை யாரு? என கேட்டார். இதுவே காலப்போக்கில் பிள்ளையார் என மருவியதாக கூறப்படுகிறது.
Also Read: Sankatahara Chaturthi: சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி.. விரதம் இருப்பது எப்படி?
கொண்டாட்டத்தின் பின்னணி
விநாயகர் சதுர்த்தி என்பது வெறும் மதம் சார்ந்த விழாவாக மட்டுமல்லாமல் ஒரு சமூக உரிமைப்பாடு, கலாச்சார பரிமாற்றம், ஆகியவற்றை ஊக்குவிக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. இதன் கொண்டாட்டங்கள் வரலாறு மிக நீண்டது. அதாவது மராட்டிய மன்னராக இருந்த சத்ரபதி சிவாஜி காலத்தில் இருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது என்றாலும் இதனை ஒரு தேசிய விழாவாக பால கங்காதர திலகர் மாற்றியமைத்ததாக சொல்லப்படுகிறது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்படும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஒன்று கூடி நீர் நிலைகளில் கரைத்து மகிழ்ந்து இயற்கையுடன் இணைந்து இப்பண்டிகையை கொண்டாட ஏதுவாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.