Tiruchendur: கோலாகலமாக தொடங்கிய திருச்செந்தூர் ஆவணி திருவிழா!
Tiruchendur Aavani Festival: திருச்செந்தூர் ஆவணி திருவிழா ஆகஸ்ட் 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மகா கும்பாபிஷேகத்திற்குப் பின் நடைபெறும் இந்த திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் ஆவணி திருவிழா (Tiruchendur Aavani Festival) கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதற்கான கொடியேற்றம் வெகு விமரிசையாக இன்று (ஆகஸ்ட் 14) அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக 2025, ஆகஸ்ட் 13 ஆம் தேதி மாலை கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது. ஆவணி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் காட்டப்பட்டது. தொடர்ந்து 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதன்பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணியளவில் அப்பர் சுவாமிகள் திருவீதிகளில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் இரவு 9 மணிக்கு தந்தப் பல்லக்கில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திர தேவருடன் 9 சன்னதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஆவணி திருவிழா நிகழ்ச்சி நிரல்
ஆகஸ்ட் 15ஆம் தேதி இரண்டாம் நாள் திருவிழாவின் போது அதிகாலையில் 5 மணிக்கு நடை திறக்கப்படும். பின் 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெறும். மாலை 4 மணிக்கு சாயரற்ற தீபாராதனை காட்டப்படும். தொடர்ந்து ஒன்பதாவது நாள் அதாவது ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை சுவாமி புறப்பாடுவை பொறுத்து பூஜை காலங்கள் மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Tiruchendur: திருச்செந்தூர் முருகனை வழிபடும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள்!
ஆவணி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக அறியப்படும் தேரோட்டம் ஆகஸ்ட் 23ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6.15 க்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நிகழும். காலை 7 மணியிலிருந்து 7:30 மணிக்குள் தேரோட்டம் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 25ஆம் தேதியுடன் ஆவணி திருவிழா நிறைவு பெறுகிறது.
Also Read: Tiruchendur: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மறக்காமல் செல்ல வேண்டிய இடம்!
ஆவணி திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் செய்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திணறும் திருச்செந்தூர்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடாக அறியப்படும் திருச்செந்தூர் சிறந்த பரிகார ஸ்தலமாகவும் அறியப்படுகிறது. இப்படியான நிலையில் 2025ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி திருச்செந்தூரில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. வழக்கமாக 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் நிலையில், ஆவணி திருவிழா தொடங்குவதால் திருச்செந்தூரில் 40 நாட்கள் மட்டுமே மண்டல பூஜை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூர் வருகை தருவதால் அந்நகரமே திணறி வருகிறது குறிப்பிடத்தக்கது.