கடன் பிரச்னையால் அவதியா? – இந்த பரிகாரம் செய்தால் தீர்வு!
இந்து சமயத்தில், விலங்குகளுக்கு உணவளிப்பது புண்ணியமான செயலாகப் பார்க்கப்படுகிறது. பசு, மீன், நாய், எறும்பு, பறவை போன்ற உயிரினங்களுக்கு உணவளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. கிரக தோஷங்கள் நீங்கும், நிதி நெருக்கடி தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் போன்றவை ஐதீகமாக உள்ளது.

இயற்கையின் அமைப்பில் மனிதர்கள் தொடங்கி அனைத்து விதமான படைப்புகளும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு கடவுளுக்கு சமமாகக் கருதப்படுகிறது. நம்முடைய சாஸ்திர நம்பிக்கையில், பூஜை வழிபாட்டில் அவற்றுக்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் எல்லா மதத்திலும் தானம் என்பது புனிதமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது மனிதனாக இருந்தாலும் சரி, உயிரினமாக இருந்தாலும் சரி யார் ஒருவர் தானம் அளிக்கிறாரோ அவர் மிகுந்த பலன்களைப் பெறுவார் என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்னைகளில் இருந்தும் விடுவிக்கிறது. அப்படியாக உயிரினங்களுக்கு உணவளிப்பது என்ன மாதிரியான தீர்வை கொடுக்கும் என்பது பற்றிக் காணலாம்.
என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும்?
பசு: இந்துக்கள் பசுவை கோமாதா என்று அழைக்கிறார்கள். அதை கடவுளுக்கு சமமாகக் கருதி வணங்குகிறார்கள். பசுவில் முன்னூறு கடவுள்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் தான் அது அனைத்து உயிரினங்களுக்கும் தாயாக பார்க்கப்படுகிறது. பலர் தினமும் காலையில் தங்கள் வேலையை தொடங்கும் முன் பசுவை வணங்குவதை பார்த்திருப்போம். மேலும், யாராவது தங்கள் ஜாதகத்தில் கிரகக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் பசுவுக்கு உணவை ஊட்டினால், அவர்கள் கிரகக் குறைபாடுகளிலிருந்து விடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், குழந்தைப்பேறு வேண்டும் தம்பதியினர் பசுவுக்கு அகத்திக்கீரை, கோதுமை மாவால் செய்யப்பட்ட ரொட்டி மற்றும் வெல்லம் ஆகியவற்றை ஊட்டினால் நன்மைகள் விளையும் என நம்பப்படுகிறது.
Also Read: தானம் செய்யப் போறீங்களா?.. தயவுசெய்து இதெல்லாம் யோசித்து பண்ணுங்க!
மீன்கள்: சிலர் வீட்டில் சாஸ்திர ரீதியாகவும், அழகுக்காகவும் மீன் வளர்ப்பதை பார்த்திருக்கலாம். ஒருவர் சூரிய அஸ்தமனத்திற்கு முன் அல்லது பின் மீன்களுக்கு உணவளிப்பது எதிரிகள் பயம், வாழ்க்கையில் சிரமம் ஏற்படுவதில் இருந்து நல்ல பலன்களைத் தரும் என நம்பப்படுகிறது. வீட்டில் மீன் இல்லை என்றால் ஏதேனும் நீர் நிலைகளில் உள்ள மீன்களுக்கு உணவளிக்கலாம். இதனால் கடன்களால் சிரமப்படுபவர்கள் அல்லது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தீர்வை காண்பார்கள் என நம்பப்படுகிறது.
நாய்கள்: இந்து மத சாஸ்திரத்தில் நாய்கள் கால பைரவராக வணங்கப்படுகின்றன. நாய்களுக்கு உணவளிப்பது சனி, ராகு மற்றும் கேதுவின் தோஷங்களை நீக்குகிறது. குறிப்பாக சனிக்கிழமைகளில், நாய்களுக்கு உணவளிப்பது சனியின் அருளைப் பெற்று தருகிறது. சனியின் தாக்கத்திலிருந்து நீங்கள் சரியான தீர்வை பெறலாம்.
எறும்புகள்: யாராவது ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், எறும்புகளுக்கு உணவளிப்பது ராகுவின் ஆசிகளைப் பெற்று அவர்களைத் துன்பங்களிலிருந்து விடுவிக்கும். எறும்புகளை தேடி நீங்கள் செல்ல வேண்டாம். அவர்களுக்கு உணவு வைத்தால் நிச்சயம் நம்மை தேடி வந்து பலன்களை தருவார்கள். குறிப்பாக கருப்பு எறும்புகளுக்கு உணவளிப்பது அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் கருப்பு எறும்புகள் இருப்பது மங்களகரமானது என்று நம்பப்படுகிறது.
Also Read: கோயிலுக்கு சென்றால் தயவுசெய்து இதெல்லாம் செய்யாதீங்க!
பறவைகள்: நகரம், கிராமம் எதுவாக இருந்தாலும் வீட்டின் முற்றத்தில் சில வகையான பறவைகள் சத்தமிடுவது மன அமைதியை அளிப்பது மட்டுமல்லாமல், நல்ல சகுனமாகவும் பார்க்கப்படுகிறது. அத்தகைய பறவைகள் சாப்பிட தண்ணீர் மற்றும் சிறு தானியங்களை வழங்குவது கல்வி விஷயம், வேலை வாய்ப்பு, தொழில் தொடர்பான சிரமங்களிலிருந்து தீர்வை அளிக்கும் என சொல்லப்படுகிறது. குழந்தைப்பேறுக்காக வழிபடும் கணவன்-மனைவி பறவைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் பலன்களைப் பெறலாம். வீட்டின் அருகே பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உணவை வைப்பதன் மூலம், வீட்டில் செல்வத்திற்குப் பஞ்சம் இருக்காது என்று நம்பப்படுகிறது.
(சாஸ்திர மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் கூறப்படும் தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)