கோயிலுக்கு சென்றால் தயவுசெய்து இதெல்லாம் செய்யாதீங்க!
கோயில்களில் வழிபாட்டு நடைமுறைகளைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும். தூய்மையுடன் வருதல், உரிய ஆடை அணிதல், மரியாதையான நடத்தை, கோயில் விதிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவை முக்கியமானதாகும். கோயில் ஒரு புனிதமான இடம் என்பதால், அங்கு பக்தியுடனும் அமைதியுடனும் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறை வழிபாடு (God Worship) என்பது அனைத்து மதத்திலும் மிக முக்கியமானதாக உள்ளது. ஒவ்வொரு மதத்திலும் அதற்கான நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றன. எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய விஷயத்தை சரியாக செய்தால் கடவுளின் பார்வை அனைத்து மக்களுக்கும் கிடைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகமாகும். இதில் இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் வழிபாட்டு தலங்களாக கோயில்கள் திகழ்கின்றன. சைவ, வைணவம் ஆகிய இரு சமயங்கள் அடிப்படையிலான கோயில்கள் நாம் இருக்கும் இடத்தைச் சுற்றி 4 திசையிலும் அமையப் பெற்றுள்ளது. அமைதியும்,இறையருளும் நிறைந்திருக்கும் இடமான கோயில்களுக்கு செல்லும்போது நாம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
என்னென்ன விதிகளை கடைபிடிக்க வேண்டும்?
எப்போதும் வாழ்க்கையில் தூய்மைக்கு மிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அகத்தூய்மை மட்டுமல்லாமல் புறத்தூய்மையையும் நாம் கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில் குளிக்காமல் கோயிலுக்கு செல்வதோ, வெளியில் நின்று வணங்குவதோ கூடாது. அதேபோல் பிறப்பு மற்றும் இறப்பு, தீட்டு போன்ற சமயங்களில் கோயிலுக்கு செல்லக்கூடாது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனை நீங்கள் கடைபிடிக்கும் நம்பிக்கையின்பால் பின்பற்றலாம்.
மேலும் பெண்கள் தலைவிரி கோலத்துடன் கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. மேலும் இறை வழிபாட்டுக்கு செல்லும்போது நம்மால் முடிந்த அளவு பூ, பழம், தேங்காய் என ஏதாவது ஒன்றை வாங்கிச் செல்லலாம். கோயில் புனித இடம் என்பதால் அங்கு அரைகுறை ஆடைகள், ஈரமான துணி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.
Also Read:கிரகங்களின் தாக்கத்தால் அவதியா? – இப்படி விளக்கேற்றினால் தீர்வு கிட்டும்!
ஆண்கள் மட்டுமே சாஷ்டாங்கமாக கொடி மரத்தின் அருகில் விழுந்து வணங்க வேண்டும். பெண்கள் அப்படி நமஸ்காரம் செய்வது கூடாது. மேலும் சன்னதியின் முன்பு நின்று கடவுளிடம் வேண்டுதலை சொல்லி கைத்தட்டியோ, சொடக்கு போட்டோ வழிபடக்கூடாது. கோயில் விக்கிரகங்களை தொட்டு வணங்குவதோ, அவசர அவசரமாக வலம் வருவதோ இருக்கக் கூடாது.
சிலர் நந்திக்கும் சிவபெருமானுக்கும் இடையேயிலான இடைவெளியில் சுற்றி வருவார்கள் அப்படி செய்யக்கூடாது. கோயிலில் இருக்கும்போது தெய்வ சிந்தனை மட்டுமே முழுக்க மனதில் இருக்க வேண்டும். சற்று அமரும் நேரத்தில் கூட தேவையற்ற கதைகளை பேசுதல் கூடாது. சத்தம் போட்டு சிரித்தல், கத்துதல், அழுதல் போன்றவை இருக்கவே கூடாது.
Also Read:கோயிலுக்கு செல்பவர்களா நீங்கள்? – தயவு செய்து இந்த தப்பை பண்ணாதீங்க!
சிலர் கோயிலில் உறங்குவதை பார்த்திருக்கலாம். அப்படி எந்த காலத்திலும் செய்யக்கூடாது. அதுமட்டுமல்லாமல் கடவுளைப் பார்க்க போகும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படலாம். காத்திருந்து கடவுளை கண்டால் அவர் மனம் மகிழும். அதை விடுத்து அடுத்தவரை இகழ்ந்து நாம் மட்டும் விரைந்து தரிசனம் பார்த்தால் போதும் என நினைப்பது சுயநலமாகும். இதனை கடவுள் கருத்தில் கொண்டிருப்பார். எனவே நம் பாவங்களை தொலைக்கவும், மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தேடி கோயிலுக்கு செல்கிறோம். எனவே இது போன்ற தவறுகளை செய்யாமல் தெய்வத்தின் பரிபூரண அருளை பெற்று மகிழுங்கள் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
(இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)