Tiruchendur Temple: திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் இத்தனை சிறப்புகளா?
Tiruchendur Temple Kumbabhishekam: திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2025 ஜூலை 7 ஆம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற உள்ளது. 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் இந்த நிகழ்வுக்காக கோயில் விரிவான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 137 அடி உயர ராஜகோபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது.

தமிழ்க் கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் (Tiruchendur Murugan Temple) 2025, ஜூலை 7 ஆம் தேதி வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கோபுர கலசத்துக்கு புனித நீர் தெளிக்கப்பட உள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறவுள்ள இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கோயில் வளாகம் முழுக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு அவர்கள் வெயில் வாடி வதங்கமால் இருக்கும் வண்ணம் தரிசனம் செய்ய ஏதுவாக திருப்பதியில் இருப்பது போல மண்டபம் மாதிரி முறையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பலருக்கும் திருச்செந்தூர் என்றாலே பிரமாண்ட ராஜகோபுரம் தான் நினைவுக்கு வரும்.
கடல், சாலை என எந்த மார்க்கமாக இருந்து பார்த்தாலும் சில கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்தே தெரியும் இந்த பிரமாண்ட ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு முழுக்க திருநீறு கலந்த வண்ணத்தில் பூசப்பட்டுள்ளதால் அதில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமாக தொலைவில் உள்ள பக்தர்களுக்கும் தெரியும் வண்ணம் உள்ளது. அதுமட்டுமல்லாமல் கோபுரத்தின் மையப்பகுதியில் முருகனுக்குரிய பிரணவ மந்திரமான ஓம் என்ற சொல்லுடன் செம்பு நிறத்தில் மிகப் பிரமாண்டமான வேல் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது.
பகல், இரவு என எல்லா நேரங்களிலும் ஜொலிக்கும் இந்த திருச்செந்தூர் கோயில் ராஜ கோபுரம் . 137 அடி உயரம் கொண்டதாகும். இதில் ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்கள் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே இத்தலம் புராண ரீதியாக சிறப்புமிக்கதாக சொல்லப்படுகிறது. சூரபத்மன் என்னும் அரக்கனை முருகப்பெருமான் வதம் செய்த தலமாக திருச்செந்தூர் போற்றப்படுகிறது. இப்படியான நிலையில் கஜசம்ஹார மூர்த்தியின் சிற்பமானது இந்த ராஜகோபுரத்தில் இடம் பெற்றிருக்கிறது. அதாவது யானை ரூபத்தில் சிவபெருமான் அரக்கனை அழிப்பது தான் கஜசம்ஹார மூர்த்தி அவதாரமாகும்.
அதுமட்டுமல்லாமல் பைரவர், பிரம்மா, காளி, சந்திரசேகரர், பிரதோஷ மூர்த்தி, கஜேந்திர மோட்சம் போன்ற சிற்பங்களும் இந்த கோபுரத்தில் இடம் பெற்றுள்ளது.மேலும் வழக்கமாக லிங்கோத்பவர் சிற்பம் தான் கோபுரத்தில் இருக்கும். அதற்கு பதிலாக யேகபாத மூர்த்தி சிற்பம் இருப்பது சிறப்பான ஒன்றாகும், அதேபோல் அம்மையப்பர் திருக்கல்யாணம், யாழி, ஆகியவையும் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பது, முனிவர்கள் தவம் இருப்பது, நடராசர், மஹிஷாசுரமர்த்தினி, பிச்சாடனார், முனிவர்கள் உணவருந்துவது போன்ற சிற்பங்களும் இந்த ராஜகோபுரத்தில் இடம் பெற்றிருக்கிறது. எல்லா கோயில் ராஜகோபுரத்திலும் முனிவர்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பார்கள் என்ற நிலையில் இங்கு அன்னம் சாப்பிடுவது போல இருப்பது சிறப்பானதாகும். கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இந்த கோபுரத்தை நன்றாக தரிசித்தால் பல புண்ணியம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.