சிவன், பெருமாள் இணைந்த உருவம்.. சங்கரநாராயணர் கோயில் சிறப்புகள்!
சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் கோயில், சைவம் மற்றும் வைணவ சமயங்களின் இணக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது. சங்கன், பதுமன் ஆகிய நாக அரசர்களின் பக்தியின் விளைவாக உருவான இந்த கோயிலில், சிவன் மற்றும் பெருமாள் இணைந்த சங்கரநாராயணர் மூலவராக அருள்பாலிக்கிறார். கோயிலின் சிறப்புகள் பற்றி அறிந்து கொள்வோம்.

பொதுவாக இந்து மதத்தில் சைவம், வைணவம் ஆகிய இரு சமயங்கள் மிகப்பெரியவையாக பார்க்கப்படுகிறது. சைவ சமயத்தினர் சிவனையும், வைணவ சமயத்தினர் பெருமாளையும் முதன்மை கடவுளாக கொண்டுள்ளனர். ஆனாலும் இரு சமயமும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் நடக்கின்றனர். இப்படியான நிலையில் சிவன் வேறு, பெருமாள் வேறு என நினைப்பது தவறு என்பதை உணர்த்தும் விதமாக இறைவன் சங்கர (சிவன்) நாராயணர் (பெருமாள்) என்ற பெயரில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் அம்பாளாக கோமதியம்மன் காட்சியளிக்கிறார். இப்படிப்பட்ட பெரும் புகழ் வாய்ந்த இந்த கோயில் சிறப்புகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
கோயில் உருவான வரலாறு
சங்கன் என்ற நாக அரசன் சிவபெருமான், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும் மிகப்பெரிய அளவில் பக்தி கொண்டிருந்தனர் இருவருக்குள்ளும் அடிக்கடி சிவன் மற்றும் திருமாலின் யார் உயர்ந்தவர் என்ற வாதம் எழுந்து வந்தது. இதற்கு ஒரு முடிவு வேண்டி பார்வதி தேவியிடம் முறையிட்டனர். இருவரும் சமமான சக்தி கொண்டவர்கள் என்பதை பதுமன் மற்றும் சங்கனுக்கு உணர்த்த பார்வதி தேவி தவம் இருந்தாள்.
Also Read: அறிவியல் ஆய்வுகளுக்கு சவால் விடும் சிவன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?
அதனை ஏற்றுக் கொண்ட இறைவன் சிவன் மற்றும் திருமலாக இணைந்து சங்கரநாராயணர் என்ற பெயரில் காட்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அம்பிகையின் வேண்டுதலுக்கு இணங்க சிவன் சங்கரலிங்கமாக எழுந்தருளினார். சங்கன் மற்றும் பதுமன் ஆகிய இருவரும் இந்த லிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் லிங்கம் இருந்த இடத்தை புற்று மூடிவிட்டது. நாகராஜாக்களான சங்கன் மற்றும் பதுமனும் அதன் உள்ளே இருந்தனர்.
இதற்கிடையில் பக்தர் ஒருவர் அந்த புற்றை இடித்த போது உள்ளிருந்த பாம்பு ஒன்றின் வாலை வெட்ட ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர் புற்றுக்குள் சென்று பார்த்தபோது லிங்கம் இருப்பதை கண்டார். உடனடியாக பாண்டிய மன்னனுக்கு தகவல் சென்றது. அவர் லிங்கம் இருந்த இடத்தில் கோயில் எழுப்பினார். இப்படியாக சங்கர நாராயணர் கோயில் உருவானது.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலில் சிவன் மற்றும் அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சன்னதி உள்ளது. இதில் வலது பக்கத்தில் சிவனுக்குரிய கங்கை, பிறை, அக்னி, ஜடாமுடி ஆகியவை உள்ளது. அதேபோல் காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் சங்கன் குடை பிடித்தபடி இருக்கிறான்.
அதே சமயம் இடது பக்கத்தில் திருமாலுக்குரிய நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், லட்சுமி மற்றும் துளசி மணிமாலை மார்பிலும், சங்கு கையிலும், பீதாம்பரம் இடுப்பிலும் அமைந்துள்ளது. இவர் பக்கம் பதுமன் நாகவ வடிவில் குடைப்பிடித்தபடி காட்சி கொடுக்கிறான். இந்த சன்னதியில் காலை நேரத்தில் மட்டும் துளசி தீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில் விபூதி வழங்கப்படுகிறது.
Also Read: Varadharaja Perumal Temple: தமிழகத்தின் திருப்பதி.. இந்த கோயில் பற்றி தெரியுமா?
பூஜையின்போது சிவனுக்குரிய வில்வம் ,பெருமாளுக்கு உரிய துளசி மாலை ஆகியவை அணிவிக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. சிவன் அபிஷேக பிரியர் எனப்படும் நிலையில், பெருமாள் அலங்காரப் பிரியர் ஆவார். அதனால் திருமாலுக்குரிய வகையில் மூலவர் சங்கர நாராயணர் எப்போதும் அலங்காரத்துடன் காட்சி கொடுக்கிறார். இவருக்கு அபிஷேகம் செய்யப்படாது. இதே சன்னதியில் இருக்கும் ஸ்படிக லிங்கமான சந்திர மௌலீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆடி தபசு நாளில் மட்டுமே சங்கர நாராயணர் காட்சி கொடுப்பதற்காக வெளியே புறப்பட்டு செல்கிறார்.
சங்கரநாராயணர் கோயிலில் அனுக்ஞை விநாயகர் இருக்கிறார். மேலும் இந்த கோயிலில் புற்று மண் பிரசாதம் வழங்கப்படுகிறது. நோயுள்ளவர்கள் அந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடுகின்றனர். வீடுகளில் விஷ ஜந்து தொல்லை இருந்தால் சங்கரன்கோவிலுக்கு வந்து கோயிலில் அதன் வெள்ளி உருவங்களை வாங்கி காணிக்கையாக கொடுத்தால் தொல்லை நீங்கும் என்பது நம்பிக்கையாகும். கோயிலின் நுழைவு வாயிலில் அதிகார நந்தி தனது மனைவி உடன் சுயட்ஜா தேவியுடன் காட்சிக் கொடுக்கிறார்.
இந்த சங்கரன்கோயிலில் ஆடித்தபசு, பங்குனி முதல் சித்திரை வரை 41 நாட்கள் பிரம்மோற்சவம், ஐப்பசியில் திருக்கல்யாணம், தை மாதம் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21ஆம் தேதியிலிருந்து மூன்று நாட்கள் சங்கரலிங்கம் மீது சூரிய ஒளி விழுவது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இக்கோயில் காலை 5 மணி முதல் 12.30 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை சென்று வழிபட்டு பலன்களைப் பெறுங்கள்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)