Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Madurai: 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில்.. தொல்லியல் துறையினர் ஆச்சர்யம்!

மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள உடன்பட்டி என்ற சிற்றூரில் 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி 1217-1218 காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இக்கோயிலில் கண்டறியப்பட்டுள்ளன. தென்னவனீஸ்வரன் என்பது இக்கோயிலின் மூலவர் என சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு தொல்லியல் ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Madurai: 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில்.. தொல்லியல் துறையினர் ஆச்சர்யம்!
பழமையான சிவன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 06 Jun 2025 15:19 PM

மதுரை, ஜூன் 6: கோயில் நகரம் என அழைக்கப்படும் மதுரை (Madurai) மாவட்டத்தில் 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் (Ancient Shiva Temple) கண்டறியப்பட்டுள்ள சம்பவம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இடையே பெரும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இது வரலாற்றுக்கு புதிய வரவு என அவர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். இந்தக் கோயிலானது மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் வட்டத்தில் அமைந்திருக்கும் மலம்பட்டி என்ற ஊராட்சிக்கு அருகே உடன்பட்டி என்ற சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் ஓட்ட கோயில் என அழைக்கப்பட்ட பழமையான சிவன் கோயில் ஒன்று இருந்துள்ளது. மேலும் இந்த ஊரின் பழமையான பெயர் ஆற்றூர் என சிற்பத்துறை தொல்லியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆர்வலர்களுமான தேவி மற்றும் அறிவுச்செல்வம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள தகவலில், “இந்த சிதைந்து போன சிவன் கோயிலின் மூலவராக தென்னவனீஸ்வரன் இருந்துள்ளார். இக்கோயில் முதலாம் மாற வர்மன் சுந்தர பாண்டியன் காலத்தை சேர்ந்தது எனவும், கிபி 12 17- 1218 ஆகிய ஆண்டுகளில் இந்த கோயிலில் இருக்கும் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றூர் நம்பி பேரம்பள கூத்தன் எனப்படும் காங்கேய தலைவனுக்கு 64 காசுகளுக்கு அழகப்பெருமாள் என்னும் களவழி நாட்டுத் தலைவன் தனக்கு உரிமையான நாகன்குடி என்ற ஊரில் இருந்த குளம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் தோட்டம், துறவு, நன்செய், புன்செய் என அனைத்தையும் விற்றுள்ளான் என்ற செய்தியை கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது என வரலாற்ற ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய கோயிலாகும்

அதுமட்டுமல்லாமல் இந்த ஊரில் உள்ள நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் தென்னவனீஸ்வரன் சிவன் கோயிலுக்கு அன்றாட செலவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு கல்வெட்டில் திருநோக்கு அழகியான் என்பவன் தன் பெயரில் திருநோக்கு அழகிய விநாயகர்,  மற்ற பரிவார தெய்வங்களையும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தான் என அறியப்படுகிறது. இந்தக் கோயிலானது அர்த்தமண்டபம், மகா மண்டபம், நுழைவு வாயில், கருவறை என மிகப் பெரிய வளாகத்தில் அமைந்திருக்கிறது.

தற்போது சிதைந்து இருக்கும் இந்த இடத்தில் கோயில் இருந்த காலகட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அம்மன் போன்ற தெய்வங்கள் தனி சன்னதியில் அருள்பாலித்து வந்துள்ளார்கள். இதில் அம்மன் சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு முல்லையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது தலைப்பகுதி வரை மண்மூடி இருக்கும் தட்சணாமூர்த்தி சிலையை தோண்டி வெளியே கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. கோயில் அமைப்பை பார்க்கும் போது சிகரமும், கலசமும் இல்லாமல் கட்டப்பட்ட பாண்டியரின் கோயிலாக தெரிகிறது என வரலாற்று ஆர்வலர்கள் தேவி மற்றும் அறிவுச்செல்வம் கூறியுள்ளனர். பழமையான சிவன் கோயில் கண்டறியப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.