வீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா? பருவமாற்றத்திற்கு முன் அகற்றுங்கள்!
Fall Decluttering: பருவநிலை மாறும் முன் வீட்டில் தேவையற்ற பொருட்கள், பயன்படுத்தாத ஆடைகள் மற்றும் கோடைகால நினைவுப் பொருட்களை அகற்றி வீட்டை ஒழுங்குபடுத்தலாம். செல்போனில் தேவையற்ற புகைப்படங்கள், பழைய ஆவணங்கள் மற்றும் ரசீதுகளை நீக்குவதுடன், குளியலறையில் காலாவதியான பொருட்களையும் சரிபார்க்க வேண்டும்.
கோடைகால விடுமுறையில் வாங்கிய காந்தங்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட நினைவுப் பொருட்கள் வீட்டில் தேவையற்ற இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறதா என்பதை முதலில் கவனிக்கலாம். குடும்பத்தினர் அல்லது நண்பர்களுக்காக வாங்கிய பரிசுகளை நீண்ட நாட்கள் சேமித்து வைக்காமல், அவர்களிடம் கொடுத்துவிடுவது நல்லது. வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் உண்மையில் தேவையா, வீட்டின் அலங்காரத்துக்கு பொருந்துகிறதா என்பதைப் பார்த்து முடிவு செய்யலாம். பயன்படுத்தப்படாத பொருட்களை மற்றவர்களுக்கு வழங்குவது அல்லது விற்பனை செய்வது மூலம் வீட்டில் தேவையற்ற குவியலைக் குறைக்க முடியும்.
ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் கோப்புகள்
கோடைகாலத்தில் சேகரித்த காகிதங்கள், ரசீதுகள், பயண ஆவணங்கள் மட்டுமின்றி செல்போனில் குவிந்திருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் ஒருமுறை சுத்தம் செய்வது பயனுள்ளதாக இருக்கும். ஒரே புகைப்படத்தின் பல பிரதிகள், தெளிவில்லாத படங்கள் மற்றும் இனி பார்க்கத் தேவையில்லாத வீடியோக்களை நீக்குவதன் மூலம் செல்போனில் சேமிப்பு இடத்தை அதிகரிக்கலாம். முக்கியமான பயண ஆவணங்களை தனியாகப் பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். தேவையில்லாத ரசீதுகள் மற்றும் பழைய காகிதங்களை மறுசுழற்சிக்கு அனுப்பலாம்.
பயன்படுத்தாத ஆடைகள்
பருவநிலை மாறும் நேரம் அலமாரியை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்ற காலமாகும். கோடைகால ஆடைகளை ஒதுக்கி வைத்து, குளிர்ச்சியான காலத்துக்கு தேவையான ஆடைகளை எடுக்கும்போது நீண்ட காலமாக அணியாமல் இருக்கும் ஆடைகளை அடையாளம் காணலாம். அலமாரியை காலி செய்து தூசி மற்றும் அழுக்கை சுத்தம் செய்த பிறகு, ஆடைகளை ‘வைத்துக்கொள்ளலாம்’, ‘தானமாக வழங்கலாம்’, ‘பழுது பார்க்கலாம்’ என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஓராண்டுக்கும் மேலாக அணியாத ஆடைகளை விற்பனை செய்வது அல்லது தேவையுள்ளவர்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்.
குளியலறை பொருட்கள்
பாதியாக பயன்படுத்திய அழகு சாதனங்கள், பழைய சருமப் பராமரிப்புப் பொருட்கள் மற்றும் பயணத்துக்காக வாங்கிய சிறிய அளவிலான பொருட்கள் குளியலறையில் தேவையற்ற குவியலை ஏற்படுத்தலாம். பயன்படுத்தாத பொருட்களை அகற்றி, காலாவதி தேதியையும் சரிபார்க்க வேண்டும். ஒரே வகையான பொருட்களை ஒன்றாகச் சேர்த்து வைப்பதுடன், துண்டுகளை நேர்த்தியாக மடித்து வைக்கலாம். தினசரி பயன்படுத்தும் பொருட்களை எளிதில் எடுக்கக்கூடிய இடத்தில் வைத்தால் குளியலறையை ஒழுங்காக பராமரிக்க முடியும்.
Also Read: இரவில் ஒரு கப் கிராம்பு டீ… செரிமானப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு!
காலாவதியான மருந்துகள்
குளிர் மற்றும் காய்ச்சல் காலம் தொடங்குவதற்கு முன் வீட்டில் இருக்கும் மருந்துப் பெட்டியையும் ஒருமுறை சரிபார்ப்பது அவசியம். காலாவதியான மருந்துகள், அதிக வெப்பம் அல்லது முறையற்ற சேமிப்பால் பாதிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள கிருமிநாசினிப் பொருட்களை அகற்ற வேண்டும். குறிப்பாக காய்ச்சல் குறைக்கும் மருந்துகள் உள்ளிட்டவற்றின் காலாவதி தேதியை கவனமாகச் சரிபார்க்க வேண்டும். காலாவதியான மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தி, தேவையான மருந்துகள் மட்டும் உள்ளதா என்பதை சரிபார்ப்பதன் மூலம் புதிய பருவத்திற்கு வீட்டைத் தயார்படுத்தலாம்.