பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம்.. மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசு
பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தாலும், இந்தச் சம்பவத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைத் தலைவரிடம் நேரடி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜூலை 28, 2026: பிரதமர் நரேந்திர மோடி இளைஞர்களுக்கு உரையாற்றும் வகையில் ஃபேஸ்புக்கில் வெளியிட்டிருந்த பதிவை சமூக வலைதள நிறுவனமான மெட்டா நீக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைத் தலைவரை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியின் பதிவு நீக்கம் – மெட்டா நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்:
அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த காணொளி திடீரென நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் கேட்கும் வகையில் மெட்டா நிறுவனத்தின் உயரதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் அளிக்குமாறு அமைச்சகம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வினாத்தாள் கசிவுக்கு முடிவு கட்டும் புதிய சட்டத்திருத்தம்.. ரூ.10 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை.. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்!
கடந்த ஜூலை 23-ஆம் தேதி, கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டி ஏற்பாடு செய்திருந்த மாணவர் போராட்டத்தின் பின்னணியில், இளைஞர்களை நோக்கி பிரதமர் மோடி வெளியிட்டிருந்த அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருந்தது. அதில், தேர்வுத் தாள் கசிவு சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பது அரசின் முன்னுரிமையாக இருக்கும் என்றும் பிரதமர் உறுதியளித்திருந்தார்.
இந்த காணொளி ஃபேஸ்புக்கில் இருந்து திடீரென நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடையே கேள்விகள் எழுந்தன. இதையடுத்து, மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தொழில்நுட்ப பிழை – மெட்டா விளக்கம்:
இதுகுறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “தொழில்நுட்பப் பிழை காரணமாக அந்தப் பதிவு தவறுதலாக நீக்கப்பட்டது. பின்னர் பிழை கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பதிவு மீண்டும் ஃபேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வினாத்தாள் கசிவு விவகாரம் – முறைக்கேடுகளை தவிர்க்க சிறப்பு குழுவை அறிவித்த பிரதமர் மோடி
பிரதமரின் அதிகாரப்பூர்வ பதிவு தவறுதலாக நீக்கப்பட்டதாக மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்திருந்தாலும், இந்தச் சம்பவத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, மெட்டா நிறுவனத்தின் உலகளாவிய பொதுக் கொள்கைத் தலைவரிடம் நேரடி விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக மெட்டா நிறுவனம் மற்றும் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அரசியல் மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.