AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. 850 தொகுதிகளாக உயரும் மக்களவை?.. 3 முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல்!

இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்த தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்த முன்மொழிவுகளை எதிர்த்து உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்கிறார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.. 850 தொகுதிகளாக உயரும் மக்களவை?.. 3 முக்கிய மசோதாக்கள் இன்று தாக்கல்!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Apr 2026 07:50 AM IST

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற சிறப்பு அமர்வு ஏப்ரல் 16ம் தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்திருந்தார். இந்த சிறப்பு கூட்டத்தொடர் 3 நாட்களுக்கு (ஏப்.18 வரை) நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார். சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது (மக்களவை தொகுதிகளை 850 ஆக அதிகரிப்பது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் முன்மொழியப்பட உள்ளது. இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் உறுப்பினர்களின் பார்வைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!

இன்று கூடுகிறது நாடாளுமன்றம்:

நாடாளுமன்றத்தில் இந்த சிறப்பு கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை கிரண் ரிஜிஜூ வெளியிடும்போதே, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெறும் காலச் சூழலில் இந்த சிறப்பு கூட்டத்தொடர் தேவையில்லாதது என்றும், வேண்டும் என்றால் தேர்தல்கள் முடிந்தபிறகு கூட்டலாம் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அரசு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்த தொகுதி மறுவரையறைக்கான சட்டத்திருத்த முன்மொழிவுகளை எதிர்த்து உள்ளன. எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடுகிறது. அப்போது யூனியன் பிரதேச சட்ட திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்கிறார். மற்ற 2 மசோதாக்களையும் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அறிமுகம் செய்து வைக்கிறார்.

‘இந்தியா’ கூட்டணி கூட்டம்:

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது பற்றியும், அரசின் சட்டத்திருத்த மசோதாக்கள் பற்றியும் ‘இந்தியா’ கூட்டணியின் எதிர்க்கட்சிகள் நேற்று ஒன்றுதிரண்டு ஆலோசித்தன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஜெயராம் ரமேஷ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மகளிர் இட ஒதுக்கீடு:

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே, நாங்கள் அனைவரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறோம். இருப்பினும், அது கொண்டுவரப்பட்ட விதம் கேள்விக்குரியதாக உள்ளது. அது குறித்து எங்களுக்கு கடுமையான சந்தேகங்கள் உள்ளன. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. எதிர்க்கட்சிகளை குறிவைத்து ஒடுக்குவதற்காக மோடி அரசு இவ்வாறு செயல்படுகிறது. முன்பு நிறைவேற்றப்பட்ட திருத்தங்களின் அடிப்படையிலேயே அது செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தொகுதி மறுவரையறை விஷயத்தில், அரசு சில தந்திரங்களை கையாளுவதாகத் தெரிகிறது. எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தில் போராட போகின்றன. இந்த மசோதாவை எதிர்ப்பது என்று நாங்கள் ஒன்றுபட்டு முடிவு செய்துள்ளோம் என்றார்.

Follow Us