கேரளாவில் பணிமனையில் இருந்து அரசு பேருந்தை திருடிச் சென்ற நபர்.. பரபரப்பு சம்பவம்!
Man Stole Government Bus | கேரளாவின் பாலக்காடு பகுதியில் உள்ள பணிமனை ஒன்றில் அரசு பேருந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில், அதிகாலை நேரத்தில் அங்கு சென்ற நபர் ஒருவர் பேருந்தை திருடிச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலக்காடு, ஜூன் 08 : கேரளம் (Keralam) மாநிலம், பாலக்காட்டில் மர்ம நபர் ஒருவர் அரசு பேருந்தை திருடிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணிமனையில் இருந்து பேருந்தை திருடிச் சென்ற அந்த நபர், போக்குவரத்து ஊழியர்கள் பின் தொடர்ந்து சென்றதை அடுத்து பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், அரசு பேருந்தை திருட முயன்ற அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பணிமனையில் இருந்து அரசு பேருந்தை திருடிச் சென்ற நபர்
கேரள மாநிலம், பாலக்காட்டில் அரசின் போக்குவரத்து பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் அரசு பேருந்து ஒன்று பராமரிப்பு முடிந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேருந்தை நேற்று (ஜூன் 07, 2026) அதிகாலை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார். அரசு பேருந்து திருட்டுப்போன தகவல் அறிந்து போக்குவரத்து ஊழியர்கள் அந்த பேருந்தை விரட்டிச் சென்றுள்ளனர். அதனால் பயந்துப்போன அந்த நபர் பாலக்காடு நகரில் உள்ள மங்களம் நகர் என்ற பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிங்க : சிறுத்தையின் அழிவு டூ சர்வதேச இடமாற்றம் – பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில் சிறுத்தைக்கான முன்னெடுப்பு!




பேருந்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்
பணிமனையில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த பேருந்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், அதனை போக்குவரத்து துறை ஊழியர்கள் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர் பேருந்தை திருடிச் சென்றபோது அஜாக்கிரதையாக ஓட்டிச் சென்றதால், ஒரு வீடு மற்றும் கடை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதையும் படிங்க : ரீல்ஸ் மோகத்தால் பலியான 2 இளைஞர்கள்.. உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!
தொடர் விபத்துகள் ஏற்பட்டதன் காரணமாக அந்த நபர் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், பணிமனையில் இருந்து அரசு பேருந்து எப்படி வெளியே கொண்டுவரப்பட்டது, திருட்டின் பின்னணி என்ன என்ற கோணங்களில் பேருந்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.