Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2 பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!

Man Killed His Children and Himself | தெலங்கானாவை சேர்ந்த சிவராமுலு என்ற நபர் தனது இரண்டு பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த நிலையில், தானும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மனைவி விவாகரத்து பெற்றுச் சென்ற நிலையில், பிள்ளைகளை பராமரிக்க முடியாமல் அவர் இந்த செயலை செய்துள்ளார்.

2 பிள்ளைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த தந்தை.. தானும் விபரீத முடிவு.. தெலங்கானாவில் பகீர் சம்பவம்!
குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சிவராமுலு
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Jan 2026 08:03 AM IST

நாராயண்பேட், ஜனவரி 09 : தெலங்கானா (Telangana) மாநிலம், நாராயண்பேட் மாவட்டம், மரிகல் மண்டலம் திலேர் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான சிவாரமுலு. இவருக்கு சுஜாதா என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ரித்திகா என்ற 8 வயது மகளும், சைதன்யா என்ற 6 வயது மகனும் இருந்துள்ளனர். இவர்கள் குடும்பமாக ஒன்பது ஆண்டு காலம் வாழ்ந்திருந்தாலும், திருமணமானது முதலே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

9 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து செய்துக்கொண்ட தம்பதி

இவ்வாறு தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், 2025 மார்ச் மாதத்தில் தம்பதி இருவரும் விவாகரத்து செய்துக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக குழந்தைகள் இருவரும் தந்தையின் பராமரிப்பில் இருந்துள்ளனர். மனைவியை பிரிந்த சிவாரமுலு, பிள்ளைகளை வளர்ப்பதில் கடும் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் இந்த கொடூர செயலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : சோஷியல் மீடியா வலை.. இந்திய இளைஞர்களை குறி வைக்கும் பாகிஸ்தான்.. போலீசார் சொன்ன ஷாக் தகவல்கள்!

குழந்தைகளை கழுத்தை நெருக்கி கொலை செய்த தந்தை

ஜனவரி 05, 2026 அன்று தனது இரண்டு குழந்தைகளையும் சிவராமுலு விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அமைக்கப்பட்ட குடிசையில் அவர்களை தூங்க வைத்த அவர், அவர்கள் நன்கு தூகியதும் கயிற்றை கொண்டு குழந்தைகளின் கழுத்தை நெருக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன்பிறகு அருகில் உள்ள ஏரியில் குழந்தைகளின் உடல்களை அவர் வீசியுள்ளார். அதுமட்டுமன்றி தான் தயாராக வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டு, பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : 5 வயது மகனை கொலை செய்துவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு.. கேரளாவில் பகீர் சம்பவம்!

விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஏரியில் கிடந்த குழந்தைகளின் உடல்களையும், சிவராமுலுவின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவாகரத்துக்கு பிறகு குழந்தைகளை பராமரிக்க முடியாததால் தந்தை தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்டது அந்த பகுதி மக்களிடையே பரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)