கேரளாவில் கனமழை.. நிலச்சரிவில் சிக்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு.. இடுக்கியில் சோகம்!
Kerala Heavy Rain and Landslide in Idukki: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண்ணை 40 கி.மீ தூரம் தூக்கிச் சென்று பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மலைப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக இடுக்கி, வயநாடு போன்ற மலைச் சரிவுப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகளும், காட்டாற்று வெள்ளமும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து மழை எச்சரிக்கைகளை விடுத்து வரும் சூழலில், இடுக்கி மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட எதிர்பாராத நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : சமூக வலைதளங்களில் பரவும் மதுரை மீனாட்சி அம்மன் மூலஸ்தான வீடியோ – காவல்துறையினர் தீவிர விசாரணை
ஒதுங்கியபோது நேர்ந்த அசம்பாவிதம்:
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான பாலகிருஷ்ணன், இவரது தங்கை சின்னம்மாள் மற்றும் மனைவி மாரியம்மாள் ஆகிய மூவரும் வழக்கம்போல பணி நிமித்தமாக வெளியில் சென்றிருந்தனர். அப்போது அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், மழைக்கு ஒதுங்குவதற்காக வட்டவாடா அருகே உள்ள கொட்டக்கம்பூர் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு தகரக் கொட்டகையில் மூவரும் தஞ்சமடைந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த மலையிலிருந்து பயங்கர மண் சரிவு ஏற்பட்டு, அவர்கள் தங்கியிருந்த தகரக் கொட்டகை மீது விழுந்தது. இதில் மண்ணுக்குள் சிக்கிய பாலகிருஷ்ணனும், அவரது தங்கை சின்னம்மாளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரைக் காப்பாற்றிய பொதுமக்கள்:
இந்த கோரச் சம்பவத்தில் பாலகிருஷ்ணனின் மனைவி மாரியம்மாள் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டார். விபத்து நடந்த கொட்டக்கம்பூர் பகுதி மிகவும் செங்குத்தான மலைப்பகுதியாகவும் கரடுமுரடான பாதையாகவும் இருந்ததால், மீட்பு வாகனங்கள் அல்லது ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு உடனடியாகச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சற்றும் தாமதிக்காமல், காயமடைந்த மாரியம்மாளைச் சுமந்துகொண்டு சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூணாறு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க : ஏஐ மூலம் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை பிடித்த சென்னை போலீஸ் – பரபரப்பு சம்பவம்
தீவிரமடையும் மீட்புப் பணிகள்:
கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கனமழையின் தாக்கம் தீவிரமடைந்ததால் இடுக்கி மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கையாக உயர்த்தப்பட்டது. மழைநீருடன் சகதியும் சேறும் கலந்து காட்டாற்று வெள்ளம் போல் வீதிகளிலும் தோட்டங்களிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மேலும் யாரேனும் சிக்கியிருக்கலாமா என்ற கோணத்தில், சரிந்த மண்ணை அகற்றும் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், ஆபத்தான மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.