மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. மருத்துவமனை வாசலில் நர்ஸ் படுகொலை.. கணவன் வெறிச்செயல்!
Husband Killed Nurse Wife In Front Of The Hospital | ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் விஜய், சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த விஜய் அவரை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.
அமராவதி, நவம்பர் 14 : ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலம், விஜயவாடா மாவட்டத்தை சேர்ந்தவர் 40 வயதான விஜய். இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி. அவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் மகனும் உள்ளார்.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் – கொடூர செயலை செய்த கணவன்
திருமணத்திற்கு பிறகு விஜய்க்கு தனது மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக 1.5 ஆண்டுகளாக கணவனை பிரிந்து சரஸ்வதி தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (நவம்பர் 13, 2025) வழக்கம் போல வேலைக்கு சென்ற சரஸ்வதி பணி முடிந்து, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த விஜய், அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சரஸ்வதியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதையும் படிங்க : உயிரியில் பூங்காவில் பயங்கரம்; சிறுத்தை தாக்கி பெண் படுகாயம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ




மருத்துவமனை வாசலில் துடிதுடித்து பலியான சரஸ்வதி
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த சரஸ்வதியை அங்கிருந்தவர்கள் மீட்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், சரஸ்வதியை குத்திய கத்தியில் ரத்தம் சொட்ட சொட்ட நின்றுக்கொண்டு இருந்த விஜய், யாராவது காப்பாற்ற வந்தால் உங்களையும் கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், யாரும் அருகில் செல்லாமல் இருந்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுதி நேரத்தில் சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க : டெல்லியில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட உமர் நபி.. ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதி வீடு இடிப்பு
விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறை
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விஜயை கைது செய்தனர். பின்னர் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விஜயை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கணவனவே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.