AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பாஜக – காங்கிரஸ் இல்லாத ‘3வது அணி’.. டெல்லி அரசியலில் புதிய துருவத்தை உருவாக்கும் திமுக!

DMK Master Plan for Third Front; 2029 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத 'மூன்றாவது அணி' அமைக்கும் முயற்சியில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளதாக டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் உத்தவ் தாக்கரேவை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்ததன் பின்னணியில், இந்த பிரம்மாண்ட கூட்டணி வியூகம் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜக – காங்கிரஸ் இல்லாத ‘3வது அணி’.. டெல்லி அரசியலில் புதிய துருவத்தை உருவாக்கும் திமுக!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 14 Sep 2026 07:27 AM IST

சென்னை, செப்டம்பர் 14: இந்திய அரசியலில் அடுத்தடுத்து உருவாகும் மாற்றங்கள் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் வரை உள்ள நிலையில், அகில இந்திய அரசியலில் ஒரு புதிய துருவத்தை உருவாக்குவதற்கான முதற்கட்ட காய்களை திமுக தலைமையிலான தலைமை நகர்த்த தொடங்கியுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளையும் தவிர்த்து, மாநில அளவில் செல்வாக்குமிக்க கட்சிகளை ஒன்றிணைத்து பிரம்மாண்டமான ‘மூன்றாவது அணி’ ஒன்றை அமைக்கும் முயற்சியில் திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் இறங்கியிருப்பதாக டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : “மேடை போட்டு ஆபாசமாக பேசுவதுதான் கடைசி ஆயுதமா?”.. மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி கேள்வி!!

மும்பை சந்திப்பும் மூளும் சந்தேகங்களும்:

மும்பையில் சிவ சேனா (உத்தவ் பாலாசாஹெப் தாக்கரே) தலைவர் உத்தவ் தாக்கரேவை திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி நேரில் சந்தித்துப் பேசிய சம்பவம், இந்த தேசிய அரசியல் திருப்புமுனையின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை தொடர்பான ஆலோசனைகளுக்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது என்று வெளியுலகிற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கான புதிய கூட்டணி மற்றும் மூன்றாவது அணி அமைப்பது குறித்தே ஆழமாக விவாதிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியல் மாற்றமும் திமுகவின் புதிய நகர்வும்:

இந்த புதிய கூட்டணி நகர்வுக்கு தமிழ்நாட்டின் சமீபத்திய அரசியல் சூழல்களும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளன. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸானது தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து செயல்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியில் இருந்து திமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இந்த அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, தேசிய அரசியலில் தங்களது தனித்துவமான இடத்தை நிலைநிறுத்தவும், மத்திய அரசுக்கு எதிரான பிராந்திய சக்திகளின் குரலை ஒருங்கிணைக்கவும் திமுக ஒரு புதிய வியூகத்தைக் கையில் எடுத்துள்ளது.

தேசிய கட்சிகளுடன் முரண்படும் மாநிலக் கட்சிகள்

தற்போதைய சூழலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வலுவாக உள்ள பல பிராந்தியக் கட்சிகள் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் இணைந்து செயல்பட முடியாத நெருக்கடியில் உள்ளன. இடதுசாரி கட்சிகள், அரவிந்த் கெஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி (BSP), நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (BJD), ஜெகன்மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் மற்றும் சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி (BRS) ஆகிய கட்சிகள் இரு தேசியக் கட்சிகளிடமிருந்தும் விலகியே நிற்கின்றன. அதேவேளையில், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், உத்தவ் தாக்கரே மற்றும் உமர் அப்துல்லா போன்ற தலைவர்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தபோதிலும், காங்கிரஸின் சில செயல்பாடுகளுடன் தீவிர முரண்பாட்டிலேயே நீடிக்கின்றனர்.

இதையும் படிக்க: “கேரளாவில் காலடி பதித்த தவெக!”.. பாலக்காட்டில் திறக்கப்பட்ட முதல் கட்சி அலுவலகம்!!

திமுகவின் மாஸ்டர் பிளான் வெல்லுமா?

இத்தகைய சூழலைப் பயன்படுத்தி, காங்கிரஸ் மீது அதிருப்தியில் உள்ள தலைவர்களையும், இரு தேசியக் கட்சிகளையும் தவிர்க்கும் மாநிலக் கட்சிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர திமுக திட்டமிட்டுள்ளது. டெல்லியில் மெல்லத் தொடங்கியுள்ள இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகவே கனிமொழி – உத்தவ் தாக்கரே சந்திப்பு அமைந்துள்ளதாகத் தெரிகிறது. தேசிய அளவில் மாநில உரிமைகளைப் பாதுகாக்கவும், பிராந்தியக் கட்சிகளின் அதிகாரத்தை அதிகரிக்கவும் திமுக போடும் இந்த ‘மாஸ்டர் பிளான்’ எந்த அளவுக்கு வெற்றியைத் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow Us