வரலாற்றில் முதல்முறை – திருப்பதிக்கு 121 கிலோ தங்க நகைகள் – காணிக்கை வழங்கிய சென்னை தொழிலதிபர்
Chennai Businessman Donates 121 Kg of Gold : உலக அளவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு, வரலாற்றில் முதன்முறையாக சென்னையை சேர்ந்த தொழிலதிபரான வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர் 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றான திருப்பதி (Tirupati) வேங்கடேச பெருமாள் கோவிலுக்கு, சென்னையை சேர்ந்த தொழிலதிபரான வர்த்தமான் ஜெயின் என்ற பக்தர் 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கியுள்ளார். இவ்வளவு பெரிய அளவிலான அளவில் காணிக்கை வழங்குவது வரலாற்றில் இதுதான் முதன்முறை என கூறப்படுகிறது. இந்த காணிக்கையின் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், இந்த தங்க நகைகள் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.
வரலாற்றில் முதல்முறையாக திருப்பதிக்கு 121 கிலோ தங்க நகைகள் காணிக்கை
திருப்பதியில் உள்ள உலக பிரசிதித்தி பெற்ற திருமலை வேங்கடேசப் பெருமானின் பக்தர்கள் பல்வேறு வழிகளில் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகின்றனர். சிலர் பணமாகவும், சிலர் தங்கம் அல்லது வெள்ளி ஆபரணங்களாகவும் காணிக்கைகளை வழங்குகின்றனர். அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பம் ஒன்று, ரூ.200 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள 121 கிலோ தங்க ஆபரணங்களை இறைவனுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளது.
இதையும் படிக்க : விபத்தில் மூளைச் சாவு அடைந்த மருத்துவ மாணவர்.. 6 பேருக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்!




சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்த்தமான் ஜெயின் குடும்பத்தினர் இந்த பிரம்மாண்டமான தங்க காணிக்கையை வழங்கியுள்ளனர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், நன்கொடையாளர் குடும்பத்தினர் இந்த நகைகளை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்தனர். திருமலை வரலாற்றிலேயே, ஒரு தனிநபர் வழங்கிய மிகப்பெரிய தங்க காணிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தமான் ஜெயின் குடும்பத்தினர் வழங்கிய பிரம்மாண்டமான காணிக்கையில் 47 வகையான தங்க ஆபரணங்கள் இடம் பெற்றுள்ளன. அவை 9 தனித்தனி தொகுப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் இறைவனுக்கான கிரீடம், ஒட்டியாணம், தோள் ஆபரணங்கள், சங்கு, சக்கரம் மற்றும் அபய ஹஸ்தம் போன்றவை அடங்கும். இவை ஆகம சாஸ்திர விதிமுறைகள் மற்றும் திருப்பதி தேவஸ்தான மரபுகளுக்கு உட்பட்டு, மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.
காணிக்கையாக வழங்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் பெருமாள்
திருமலையில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு, தினமும் சுமார் 120 கிலோ தங்க ஆபரணங்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஒரு குடும்பம் இறைவனின் தினசரி அலங்காரத்திற்காக 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நவம்பர் 27, 2026 நாளை முதல் இறைவன் இந்த புதிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவார்.
இதையும் படிக்க : காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம்.. உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக அரசு.. தமிழக அரசு மீது குற்றச்சாட்டு!!
மின்சாரப் பேருந்து காணிக்கை
வர்தமான் ஜெயின் குடும்பத்தினர் இறைவனுக்கு இத்தகைய பங்களிப்பை வழங்குவது இது முதன்முறையல்ல. இந்த 2026 ஆண்டு மே 16 அன்று, அவர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) ஒரு மின்சாரப் பேருந்தை வழங்கியிருந்தனர். தற்போது, 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கியதன் மூலம், அவர்கள் மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். இந்த பிரம்மாண்டமான நன்கொடை, இறைவனின் மீது அந்த குடும்பத்தினர் கொண்டுள்ள அளப்பரிய பக்தியை பறைசாற்றுகிறது.