வேகமாக சரியும் நிலத்தடி நீர்மட்டம்.. உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்?.. வெளியான எச்சரிக்கை!!
Falling Groundwater Levels in India: இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், அடுத்த ஆண்டு வறட்சி பாதிப்பு அதிகரித்து உணவுப் பொருட்களின் விலை உயரும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எல்நினோ பாதிப்பு மற்றும் மழைப்பொழிவுக் குறைவால் குடிநீர், வேளாண் நீர்ப்பாசனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை கடும் சவாலை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது.
நவம்பர், 26: இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால், அடுத்த ஆண்டு வறட்சி பாதிப்பு அதிகரித்து உணவுப் பொருட்களின் விலை உயரும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் நாடாகத் திகழும் இந்தியாவில், மக்கள் தொகையில் 70 கோடி பேர் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு நிலத்தடி நீரையே சார்ந்திருக்கின்றனர். இத்தகைய சூழலில், எல்நினோ பாதிப்பால் மழைப்பொழிவு குறைந்ததும், ஆழ்த்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக உரிஞ்சப்படுவதும் நீர்மட்டத்தை வேகமாகச் சரியச் செய்து வருகின்றன. காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலால் பயிர்களுக்கான நீர் தேவை அதிகரிக்கும் நிலையில், பருவமழைக் குறைவால் 2080-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் சரிவது மூன்று மடங்கு அதிகரிக்கலாம் என உலக வள நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதையும் படிக்க: கடலுக்கு அடியில் அதிவேக பயணம்.. பல கி.மீ. ஆழத்தில் பிரம்மாண்ட ரயில் நிலையம்.. மும்பை டு அகமதாபாத் இடையே பணிகள் தீவிரம்!
மழைப்பொழிவு சரிவும் நீர் இருப்பு நிலவரமும்:
பருவகாலத்திற்குப் பிந்திய இயல்பான மழையளவு 33 சதவீதமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் 45 சதவீதமும், தீபகற்பப் பகுதியான தென்னிந்தியாவில் 28 சதவீதமும் மழைப்பொழிவு சரிந்துள்ளது. இதன் விளைவாகத் தென்னிந்தியாவில் 46.9 சதவீத அளவிற்கும், வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அதைவிடக் குறைவாகவும் நீர் இருப்பு உள்ளதாக ஒன்றிய அரசின் நுகர்வோர் நலத்துறை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
விளைச்சல் சரிவு, உணவு பாதுகாப்பு பாதிப்பு:
நிலத்தடி நீர்மட்டக் குறைவு மற்றும் நீர் இருப்புச் சரிவு காரணமாகக் குடிநீர்த் தேவைக்கும் வேளாண் சாகுபடிக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் வெளிப்பாடாக உணவுப் பொருள் தட்டுப்பாடு உருவெடுக்கக் கூடும் என்றும், நீர்ப்பாசனம் குறைவதால் பயிர் விளைச்சல் சரிந்து உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த விலைவாசி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் உணவுப் பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: எல் நினோவின் கடும் தாக்கம்! இந்துகுஷ் இமயமலையில் பனிச்சரிவு- வெள்ளப்பெருக்கு.. வெளியான எச்சரிக்கை!
எல்நினோ தாக்கம், அணைகளின் நிலை:
எல்நினோ பாதிப்பால் இந்த ஆண்டு இயல்பை விட 30 சதவீதம் குறைவான மழைப்பொழிவு உள்ளதால், தென்மாநில அணைகளில் சராசரி அளவை விட 46 சதவீதம் நீர் குறைவாகவே இருக்கும் எனப் பொருளாதார நிபுணர் வாரன் தமனி தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த ஆண்டு விலைவாசி உயர்வு தீவிரமாக இருக்கும் எனவும், இந்தியாவில் நிலத்தடி நீர் வேகமாகக் குறைந்து வருவது எதிர்காலத்தில் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.