துணை சபாநாயகர் ரவிசங்கர், காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிய கோரிக்கை.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்!
Case Against Deputy Speaker Ravishankar: துணை சபாநாயகர் ரவிசங்கர் மற்றும் மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தொகுதி குறை கேட்கச் சென்றபோது தாக்கப்பட்டதாகவும், மிரட்டல் விடுக்கப்படுவதாகவும், போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருச்சி, நவ.26: துறையூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும் சட்டப்பேரவைத் துணை சபாநாயகருமான ரவிசங்கர் மற்றும் மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். துறையூர் நெசவாளர் காலனி பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மனு அளிக்கவும் குறைகளைத் தெரிவிக்கவும் சென்றபோது, துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னை ஒருமையில் பேசி அடித்து விரட்டியதாக மனுதாரர் தரப்பில் பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலின் போது தனது செருப்பு, கண்ணாடி ஆகியவை வீசப்பட்ட நிலையில் அணிந்திருந்த மூன்று பவுன் சங்கிலியையும் காணவில்லை எனவும், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர் தாக்கியதாக வாக்குமூலம் பெற்றதாகவும் கார்த்திக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு; குற்றவாளியாகக் கருதக் கூடாது என கருத்து!
வாக்குமூலம் தொடர்பான குற்றச்சாட்டுகள்:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தன்னை, மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி வழக்குப் போடுவதாக மிரட்டி துணை சபாநாயகரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னைத் துன்புறுத்தி ரவிசங்கருக்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட மிரட்டியதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். குடும்பத்தினரைக் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்ததால் தான் ஆரம்பத்தில் எதுவும் நடக்காதது போல் பேசியதாகவும், பின்னர் உண்மையை வெளிப்படுத்தி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு பதிவு செய்யாததும் பொய் வழக்கு அச்சமும்:
இது தொடர்பாக மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் தொடர்ந்து தன்னை அலைக்கழித்து மிரட்டி வருவதாக கார்த்திக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலேயே விசாரணைக்கு சம்மன் அனுப்பப்படுவதாகவும், தன்னையும் தனது குடும்பத்தினரையும் பொய் வழக்கில் சிக்க வைத்துச் சிறைப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் தனது மனுவில் வேதனை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
துணை சபாநாயகர் மீது நடவடிக்கை கோரிக்கை:
தொகுதி மக்களின் பிரச்சினைகளைக் கேட்க வந்தவரைத் தாக்கி மிரட்டியதாகக் கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும், அவருக்குத் துணையாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்படும் மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் கிருபாநிதி மீதும் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக எண்ணிடப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.