AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கார்த்திகை தீபம் அன்று நேர்ந்த சோகம்.. விளக்கில் டீசல் கேன் பட்டு தீ விபத்து.. 2 வயது குழந்தை மற்றும் தந்தை உடல் கருகி உயிரிழப்பு..

சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் கார்த்திகை தீபத்தன்று டீசல் கேன் விளக்கில் பட்டு ஏற்பட்ட தீ விபத்தில், 2 வயது குழந்தை தன்ஷிகா உயிரிழந்தார். குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தந்தை அறிவழகனும் 85 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாய் அஞ்சனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திகை தீபம் அன்று நேர்ந்த சோகம்.. விளக்கில் டீசல் கேன் பட்டு தீ விபத்து.. 2 வயது குழந்தை மற்றும் தந்தை உடல் கருகி உயிரிழப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Nov 2026 07:52 AM IST

நவம்பர் 26, 2026: சென்னை மாதவரம் அருகே கார்த்திகை தீபத்தன்று வீட்டில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த விளக்கில் டீசல் கேன் பட்டு ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு வயது குழந்தையும் அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 85 சதவீத தீக்காயமடைந்த தந்தையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தையின் தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டீசல் கேன் தவறி விழுந்ததால் தீ விபத்து

சென்னை மாதவரம் அருகே பொன்னியம்மன் மேடு கணபதி நகர் பகுதியில் குறுகலான சாலையின் இருபுறங்களிலும் வீடுகள் அமைந்துள்ளன. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் டீசல் கேனை எடுத்துச் சென்ற லாரி ஓட்டுநரின் கையில் இருந்து கேன் தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ, கேனில் இருந்த எரிபொருளில் பட்டுள்ளது. இதனால் திடீரென தீப்பற்றி, மளமளவெனப் பரவியது.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தங்களிடம் ஆலோசிக்காமல் பெயர்களைச் சேர்த்து அறிக்கை வெளியிட்டதாக ஸ்தானிக பட்டர்கள் அதிருப்தி

குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தந்தையும் பலி

இந்த தீ விபத்தில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தன்ஷிகா தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க முயன்ற அவரது தந்தை அறிவழகனுக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு சுமார் 85 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அறிவழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். ஒரே விபத்தில் தந்தையும், இரண்டு வயது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: துணை சபாநாயகர் ரவிசங்கர், காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிய கோரிக்கை.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்!

தாய்க்கு தீவிர சிகிச்சை

தீ விபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் அஞ்சனா, இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளார். இந்த முயற்சியில் அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திகை தீபத் திருநாளில் வீட்டில் ஏற்றப்பட்டிருந்த விளக்கின் அருகே எரிபொருள் கேன் தவறி விழுந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில், தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow Us