“அடிங்கடா… என்னை அடிங்கடா!” – வைகோ மீதான விமர்சனங்களுக்கு ஆவேசமாக பதிலளித்த துரை வைகோ
தந்தை வைகோ மீதான விமர்சனங்களுக்கு துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “என் தந்தைக்கு இப்போது 82 வயதாகிறது. 64 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்காக உழைத்துள்ளார். ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். வயதான ஒருவரை உணர்ச்சிவசப்படுத்தி, அவர் பேசுவதை மட்டும் வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் சிலருக்கு ஒரு சுகம் இருக்கிறது.
நவம்பர் 25, 2026: தனது தந்தையும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வரும் நபர்களுக்கு, மதிமுக முதன்மைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ ஆவேசமாக பதிலளித்துள்ளார். “அடிங்கடா… என்னை அடிங்கடா… சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். அதற்கு நான் பதிலளிக்கிறேன்” என அவர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
வைகோவை விமர்சித்து வரும் நெட்டிசன்கள்
கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் மதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வந்தது. ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகிறார். இதனால், சமூக வலைதளங்களில் வைகோவுக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்தபோது அக்கட்சியின் செயல்பாடுகளை ஏன் விமர்சிக்கவில்லை என்றும், கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகுதான் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறாரா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வைகோவின் பேச்சுகள் தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விமர்சனங்களும், கேலிப் பதிவுகளும் வெளியாகி வருகின்றன.
தமிழ்நாட்டிற்காக உழைத்தவரைக் கொச்சைப்படுத்துவது கேவலம்
இந்த நிலையில், தந்தை வைகோ மீதான விமர்சனங்களுக்கு துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பதிலளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “என் தந்தைக்கு இப்போது 82 வயதாகிறது. 64 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்காக உழைத்துள்ளார். ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார். 6,000 கிலோமீட்டர் நடந்திருக்கிறார். அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடியவர். தற்போது வயது மூப்பின் காரணமாகப் பல விஷயங்களை மறந்துவிடுகிறார்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாதது ஏன்? முதல்வர் விஜய்யிடம் அறிக்கை கேட்ட ஆளுநர் அர்லேகர்..
அவர் உணர்ச்சிவசப்படுவதை நான் சரி என்று சொல்லவில்லை. ஆனால், வயதான ஒருவரை உணர்ச்சிவசப்படுத்தி, அவர் பேசுவதை மட்டும் வெட்டி சமூக வலைதளங்களில் பதிவிடுவதில் சிலருக்கு ஒரு சுகம் இருக்கிறது. இது ஒரு ஈனப் பொழப்பு. அடிங்கடா… என்னை அடிங்கடா… சமூக வலைதளங்களில் போடுங்கள். அதற்கு நான் பதிலளிக்கிறேன். தமிழ்நாட்டிற்காக உழைத்த ஒருவரைக் கொச்சைப்படுத்துவது கேவலமானது” எனத் தெரிவித்தார்.
கருத்தியல் ரீதியாக மோதுங்கள்
மேலும், “திமுக தோழர்கள் பலரும் இதுபோன்ற விமர்சனங்களைப் பார்த்து வருத்தப்படுகிறார்கள். கருத்தியல் ரீதியாக மோதுங்கள். அதைவிடுத்து இதுபோன்ற பொய்யான பிம்பங்களை உருவாக்காதீர்கள். ஒரு காலத்தில் மேடை போட்டு விமர்சிப்பார்கள். ஆனால், இன்று காசு வாங்கிக்கொண்டு சமூக வலைதளங்களில் பதிவுகளைப் போடுகிறார்கள். அதுதான் இப்போது இருக்கும் வித்தியாசம்” என்றும் துரை வைகோ ஆவேசமாகக் கூறினார்.