AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இந்தியாவின் வளர்ச்சிக்கு அரசியலமைப்பே வழிகாட்டி! – அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

PM Modi: பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா, ஆயுஷ்மான் பாரத், முத்ரா மற்றும் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் உள்ளிட்டவை மக்களின் கண்ணியம், சமத்துவம், பொருளாதார நீதி ஆகிய அரசியலமைப்பு இலக்குகளை முன்னெடுத்துச் சென்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அவர் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு அரசியலமைப்பே வழிகாட்டி! – அரசியலமைப்பு தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 Nov 2026 10:45 AM IST

நவம்பர் 26, 2026: இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறுவதற்கான இலக்கை நோக்கிப் பயணித்து வரும் நிலையில், ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் நலனை முதன்மையாகக் கருதி, தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் வளர்ச்சிக்கு அரசியலமைப்புச் சட்டமே வழிகாட்டும் சக்தியாக விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் உள்ளிட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு மரியாதை


நவம்பர் 26ஆம் தேதி அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், டாக்டர் ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தினார். 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், இந்தியாவின் நாகரிகப் பண்புகளையும், பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

சாதாரணப் பின்னணியில் இருந்து வந்தவர்கள்கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புகளை வகிக்கும் வாய்ப்பை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளதாகக் கூறிய மோடி, தனது அரசியல் பயணத்தையும் அதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டார்.

வறுமை ஒழிப்பு மற்றும் அரசின் திட்டங்கள்

பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா, ஆயுஷ்மான் பாரத், முத்ரா மற்றும் பிரதமரின் ஸ்வநிதி திட்டம் உள்ளிட்டவை மக்களின் கண்ணியம், சமத்துவம், பொருளாதார நீதி ஆகிய அரசியலமைப்பு இலக்குகளை முன்னெடுத்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உலக வங்கியின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தியாவில் சுமார் 50 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், ஜிஎஸ்டி, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றை உறுதி செய்த 101, 102, 103ஆவது அரசியலமைப்புத் திருத்தங்களையும் அவர் எடுத்துரைத்தார்.

22 மொழிகளில் அரசியலமைப்பு

எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளிலும் தற்போது அரசியலமைப்புச் சட்டம் கிடைப்பதாகக் குறிப்பிட்ட மோடி, பாரதிய நியாய சன்ஹிதா மூலம் குற்றவியல் நீதி அமைப்பு தண்டனையை மையமாகக் கொண்ட நிலையிலிருந்து நீதியை மையமாகக் கொண்ட நிலைக்கு மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மீது விமர்சனம்

அவசரநிலை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட 42ஆவது அரசியலமைப்புத் திருத்தம், 1951ஆம் ஆண்டின் முதல் திருத்தம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்ட பிரதமர், முந்தைய அரசுகள் அரசியலமைப்புச் சுதந்திரங்களையும் அமைப்புகளையும் பலவீனப்படுத்தியதாகக் குற்றம்சாட்டினார். மேலும், அரசியலமைப்பின் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டதையும் விமர்சித்தார்.

மேலும் படிக்க: வேகமாக சரியும் நிலத்தடி நீர்மட்டம்.. உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்?.. வெளியான எச்சரிக்கை!!

2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டது வரலாற்றுப் பிழையைச் சரிசெய்த நடவடிக்கை எனக் குறிப்பிட்டார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாகவும், மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடமையே வளர்ச்சிக்கான அடித்தளம்

தூய்மை இந்தியா திட்டம், நீர் சேமிப்பு உள்ளிட்ட முயற்சிகள் குடிமக்களின் கடமை உணர்வை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட பிரதமர், 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க ஒவ்வொருவரும் தங்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.

தனது உரையின் நிறைவில், “நமது சிந்தனையில் இந்தியா முதன்மையாக இருக்க வேண்டும்; நமது செயல்களில் கடமை உணர்வு இருக்க வேண்டும்” என்ற இரண்டு கொள்கைகளே இந்தியாவின் எதிர்காலப் பயணத்திற்கு வழிகாட்ட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

 

Follow Us