AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை பணிகளில் 50% இடஒதுக்கீடு.. தளர்வுகள் என்ன?

முன்னாள் அக்னிவீரர்கள் மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படைகளில் சேருவதற்கான தகுதி அடிப்படையில், தகுதி மதிப்பெண்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட சுமார் 2,600 அக்னிவீரர்களைக் கொண்ட முதல் தொகுதி, இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை பணிகளில் 50% இடஒதுக்கீடு.. தளர்வுகள் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jul 2026 18:27 PM IST

ஜூலை 22, 2026: முன்னாள் அக்னிவீரர்களுக்கு மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படைகளில் கான்ஸ்டபிள் (பொதுப்பணி) மற்றும் ரைஃபிள்மேன் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் 50% இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், முன்னாள் அக்னிவீரர்களுக்கு எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு ஆகியவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்வு:

முன்னதாக, 2023ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, முன்னாள் அக்னிவீரர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்திருந்தது. அப்போது உடல் தகுதித் தேர்வுகளில் இருந்து மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) உள்ளிட்ட பல்வேறு படைகள், முன்னாள் அக்னிவீரர்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியதுடன், எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வுகளில் இருந்தும் விலக்கு அளிக்க முன்மொழிந்திருந்தன.

மக்களவையில் பாஜக எம்.பி. ஜனார்தன் சிங் சிக்ரிவால் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். அதில், “மத்திய ஆயுத காவல் படைகளில் கான்ஸ்டபிள் (பொதுப்பணி) மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படையில் ரைஃபிள்மேன் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் முன்னாள் அக்னிவீரர்களுக்காக புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பிலும் தளர்வு:

முன்னாள் அக்னிவீரர்களுக்கான ஆட்சேர்ப்பில் 50% இடஒதுக்கீடு, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு ஆகியவை வழங்கப்படும். முதல் தொகுதி முன்னாள் அக்னிவீரர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வயது வரம்புக்கு மேல் கூடுதலாக 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படும். மேலும், உடல் தரநிலைத் தேர்வு, உடல் திறன் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வுகளில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும் என நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அக்னிவீரர்களின் அடுத்தகட்ட முன்னேற்றத்தை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முதல் தொகுதி அக்னிவீரர்களின் பணிக்காலம் இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: “எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்!”.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் உச்ச நீதிமன்றம் கெடுபிடி!

முன்னாள் அக்னிவீரர்கள் மத்திய ஆயுத காவல் படைகள் மற்றும் அசாம் ரைஃபிள்ஸ் படைகளில் சேருவதற்கான தகுதி அடிப்படையில், தகுதி மதிப்பெண்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

மத்திய ஆயுத காவல் படைகளில் சேர தகுதி:

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்ட சுமார் 2,600 அக்னிவீரர்களைக் கொண்ட முதல் தொகுதி, இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் பல்வேறு மத்திய ஆயுத காவல் படைகளில் சேருவதற்குத் தகுதி பெறுவார்கள்.

ஹரியானா, டெல்லி மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களின் காவல் துறைகளும் முன்னாள் அக்னிவீரர்களுக்கு 20% இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளன.

ஆயுதப் படைகளின் சராசரி வயதைக் குறைத்து, உடல் தகுதி மிக்க ராணுவத்தை உருவாக்கவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தொழில்நுட்பத் திறன் கொண்ட படைகளை உருவாக்கவும், 2022ஆம் ஆண்டு மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின் கீழ், வீரர்கள் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தப்படுவர். பின்னர் நடைபெறும் மற்றொரு தேர்வு முறையின் அடிப்படையில், 25% வீரர்கள் மட்டும் வழக்கமான ராணுவப் பணியில் 15 ஆண்டுகளுக்கு தக்கவைக்கப்படுவார்கள்.

Follow Us