“காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்”.. ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சுக்கு ரஜினிகாந்த் பதிலடி..
Rajinikanth hits back to Aadav Arjuna: இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை, மார்ச் 17: ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு உண்மைக்க மாறானது என ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். “திமுக விடுத்த மிரட்டலால் அரசியலில் இருந்து ரஜினிகாந்த் விலகியதாகவும், விஜய்க்கு இருக்கும் மனவலிமை ரஜினிக்கு இல்லை எனவும்” பொதுவெளியில் பல்வேறு அவதூறு கருத்துகளை ஆதவ் அர்ஜுனா முன்வைத்தார். இதைத்தொடர்ந்து, ஆதவ் அர்ஜுனாவின் அவதூறு பேச்சுக்கு தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி என ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், தற்போது ரஜினிகாந்த் நேரடியாக அறிக்கை மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிக்க: கூட்டணி இழுபறி.. தேர்தல் அறிக்கையுடன், வேட்பாளர் பட்டியல்?.. விஜய் எடுத்த அதிரடி முடிவு!!
ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை:
— Rajinikanth (@rajinikanth) March 17, 2026
இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதாவது, அந்த அறிக்கையில் அவர் நேரடியாக கண்டனத்தை பதிவு செய்யவில்லை.
தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி:
அதன்படி, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி திரு.பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் திரு.நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன், தமிழக அமைச்சர் திரு.ரகுபதி, திரு.தொல்.திருமாவளவன், திரு.எஸ்.பி.வேலுமணி, நண்பர் திரு.அண்ணாமலை, திரு.அர்ஜுனமூர்த்தி, திரு.அன்புமணி ராமதாஸ், திரு.ஜி.கே. வாசன், திரு.ஜான் பாண்டியன்,, திரு.புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், திரு.அமீர், திரு.ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் திரு.நக்கீரன் கோபால், சாணக்கியா திரு.ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்” வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!! என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: கரூர் சம்பவத்தில் காட்டிய வேகம் ஏன விளாத்திகுளம் சம்பவத்தில் காட்டவில்லை – அண்ணாமலை கேள்வி..
ஆதவ் அர்ஜுனா சர்ச்சை பேச்சு:
கடந்த மார்ச் 12ஆம் தேதி திமுக அரசைக் கண்டித்து தவெக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “எம்ஜிஆருக்குப் பின் பிரபலமான நடிகரான ரஜினி, அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற விரும்பினார். ஆனால், திமுக குடும்பம் கொடுத்த மிரட்டல்களால் அவர் அரசியலுக்கு வராமல் போனார். ரஜினி மீது எங்களுக்கு விமர்சனம் இல்லை, ஆனால் மிரட்டல்களை சமாளிக்கும் மனவலிமை விஜயிடம் உள்ளது” என்று பேசியிருந்தார்.