“தமிழகத்தை வஞ்சிக்க நினைப்போருக்கு நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்!”.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!
Tamilnadu Assembly Election: "திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. அதே சமயம், சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுத்துத் துணை நிற்பதும் திமுகதான். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது என்பதை வரலாறு சொல்லும்" என்றார்.
Tamilnadu polls 2026: தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. கருத்துக்கணிப்பு வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தலைவர்கள் இன்று இறுதி கட்ட சூறாவளிப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, மே.4ம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான மற்றும் ஆவேசமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மக்கள் மீதான தனது பற்று மற்றும் அரசியல் எதிரிகளுக்குத் தான் விடுக்கும் எச்சரிக்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இதையும் படிக்க: இறுதிக்கட்ட பரப்புரையில் அரசியல் தலைவர்கள்.. இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்வு..
வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை:
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…#வெல்வோம்_ஒன்றாக ! pic.twitter.com/wu9Kek7jAD
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 21, 2026
அந்த வீடியோவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள். கலைஞர் கருணாநிதியை விட நான் ‘மோர் டேஞ்சர்’ என்று சிலர் சொல்லும்போது எனக்கு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், மாநிலத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் பார்ப்பவர்களுக்கும் நான் என்றுமே ‘டேஞ்சர்’ தான்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பாஜக மற்றும் மதவாத அரசியல் மீதான விமர்சனம்:
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜக பொய் பிரச்சாரம் செய்வதாகக் குறிப்பிட்ட அவர், “திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. அதே சமயம், சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுத்துத் துணை நிற்பதும் திமுகதான். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜகவால் ஒருபோதும் காலூன்ற முடியாது என்பதை வரலாறு சொல்லும்” என்றார்.
திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள்:
கடந்த ஐந்து கால திமுக ஆட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர், ஆன்மீக ரீதியாக, சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான திருக்கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நமது உரிமை, மொழி மற்றும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் பாஜகவும், அவர்களுக்கு அடிமையாக இருப்பவர்களும் தமிழகத்திற்குத் தேவையில்லை.
தமிழகம் பல துறைகளில் சிறப்பாக உள்ளது:
“கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தீர்கள்?” என்று யாராவது கேட்டால், தன்னால் மணிக்கணக்காக, ஏன் நாட்கணக்காகப் பேச முடியும் என்று முதல்வர் பெருமிதத்துடன் கூறினார். மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழகம் பல துறைகளில் சிறப்பாக உள்ளதாகவும், ஒரு சில குறைகள் சொல்லப்பட்டாலும் அவை ஏற்கனவே சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் அவர் உறுதியளித்தார்.
மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..
தமிழகத்தின் வளர்ச்சியும் எதிர்காலமும் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொய்வின்றித் தொடர, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.