சிறையிலிருந்தே தேர்தல் களம் காணும் ஹரி நாடார்.. ஆலங்குளத்தில் மீண்டும் சவால்!!
Tamilnadu Assembly Election: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் ஹரி நாடார் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக, சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்தபடியே, தனது வழக்கறிஞர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
Tamilnadu Polls 2026: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தனது வித்தியாசமான தோற்றத்தாலும், “நடமாடும் நகைக்கடை” போல கிலோ கணக்கில் தங்க நகைகளை அணிந்து, ஹெலிகாப்டரில் வந்து வாக்கு சேகரித்து நாடு முழுவதும் கவனம் ஈர்த்தவர் ஹரி நாடார். வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் இருக்கும் அவர், இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை என்று பலரும் நினைத்தனர். ஆனால், எதிர்பாராத திருப்பமாக, இந்த முறையும் தேர்தல் களத்தில் ஹரி நாடார் குதித்துள்ளார். அந்தவகையில், சிறையிலிருந்தே தனது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளார். இதுகுறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிக்க: நேரடி அரசியல் களத்தில் சபரீசன்.. டெல்லியே அடுத்த டார்கெட்?.. திமுகவின் புதிய வியூகம்..
ஆலங்குளத்தில் மீண்டும் போட்டி:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் ஹரி நாடார் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக, சென்னையில் உள்ள புழல் சிறையில் இருந்தபடியே, தனது வழக்கறிஞர்கள் மற்றும் முகவர்கள் மூலமாக வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவரது சார்பாகச் “சத்திரிய சான்றோர் படை” கட்சியின் நிர்வாகிகள் ஆலங்குளம் தேர்தல் அலுவலகத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர்.




வேட்புமனுவில் சொத்து விவரங்கள்:
இதனிடையே, ஹரி நாடார் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் மலைக்க வைக்கும் வகையில் அவரது சொத்து விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, தன்னிடம் 11.5 கிலோ தங்க நகைகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் இன்றைய சந்தை மதிப்பு சுமார் 17 கோடி ரூபாய் ஆகும். மேலும், தன்னிடம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, தற்போது தன் மீது 24 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த கால தேர்தல் தாக்கம்:
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஹரி நாடார், சுமார் 37,000 வாக்குகளைப் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அங்கு 74,153 வாக்குகள் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் 3,539 வாக்குகள் வத்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து, வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 70,614 வாக்குகள் பெற்றிருந்தார். இவ்வாறு, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் கடும் சவாலை ஏற்படுத்திய அவர், அந்தத் தொகுதியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: “நாங்கள் சங்கி என்றால், பாஜகவோடு கூட்டணி வைத்த கருணாநிதி சங்கியா?”.. முதல்வருக்கு இபிஎஸ் சரமாரி கேள்வி!!
அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு:
தற்போது சிறையில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிடும் ஹரி நாடார், இந்த முறை எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு தென்காசி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.