தேர்தலுக்கு பின் திமுக சிதறும்.. “கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார்”.. புயலை கிளப்பிய அண்ணாமலை!!
Tamilnadu Assembly Election: திமுக அரசின் மீது தான் கொடுத்த ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனநாயகன் படம் கசிந்தது தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆதரவு தருவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யின் நடிப்பில் கடைசியாக உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல்கள் நீடித்து வந்தது. இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் முழு திரைப்படமும் இணையதளத்தில் கசிந்தது சினிமா, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஒட்டுமொத்த சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ‘ஜனநாயகன்’ படம் லீக்.. “உதயநிதியும், எல்.முருகனுமே காரணம்”.. ஆதவ் அர்ஜுனா பகீர் புகார்..
‘ஜனநாயகன்’ படக் கசிவு கடும் கண்டனம்:
அந்தவகையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இது பலருடைய உழைப்பு, ரத்தம் மற்றும் வியர்வை. எந்த விஷக்கிருமிகள் இதைச் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மத்திய அமைச்சர் எல்.முருகனைத் தொடர்புப்படுத்திப் பேசுவது வன்மத்தின் உச்சக்கட்டம்” என்று தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தைத் தமிழக அரசு சிபிஐ விசாரணைக்குக் கொண்டு சென்றால், பாஜக அதனை முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.
திமுக மீதான ஊழல் புகார்கள்:
திமுக அரசின் மீது தான் கொடுத்த ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் வழங்கியதாகவும், அவர்கள் பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு வந்து விசாரணை நடத்திச் சென்றும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்றார். மேலும், “ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வது உறுதி” என்று அவர் எச்சரித்தார்.
2026 தேர்தல் – “திமுக சிதறும்”:
2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 210-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம், “திமுக தோல்வியடைந்த பிறகு அக்கட்சி சிதறிவிடும். கனிமொழி அக்கா தனிக்கட்சி தொடங்குவார். செந்தில் பாலாஜி போன்றவர்கள் யாருடன் சேரலாம் என்று வாய்ப்புத் தேடுவார்கள்” என்று அவர் ஆவேசமாகக் கூறினார். “அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் மக்கள் தற்போது உருவிக்கொண்டிருக்கிறார்கள். இனி தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரவே முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க: விஜய் இல்லை என்றால் என்ன?.. அஜித்தை குறிவைக்கும் அதிமுக.. இபிஎஸ்-ன் புதிய ‘அட்டகாச பிளான்’ இதுதான்!
செந்தில் பாலாஜிக்குச் சவால்:
கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜி குறித்துப் பேசிய அண்ணாமலை, அவர் டாஸ்மாக் பணத்தை வைத்துத் தேர்தலைச் சந்திக்கப் பார்ப்பதாகவும், ஆனால் அவர் கோவையில் இதுவரை காணாத மிகப்பெரிய தோல்வியைச் சந்திப்பார் என்றும் சவால் விடுத்தார். மேலும், தமிழகம் முழுவதும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா புழக்கம், அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்தது, சாலை மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை ஆகிய நான்கு முக்கிய விஷயங்களில் மக்கள் திமுக அரசின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.