“அதிமுக ரூ.10,000 அறிவித்தால், திமுக ரூ.8,000க்கு கூப்பன் தருவார்களாம்”.. அப்படியே காப்பி.. விளாசிய இபிஎஸ்!!
Tamilnadu Assembly election: அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் நிறைய முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இன்னும் அதிமுக சொந்த காலில் நிற்கிறது. திமுக, கூட்டணி காலில் நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். அதிமுகவின் எதிரி திமுக தான். அவர்களை வீழ்த்த தான் கூட்டணி அமைத்து உள்ளோம்.
Tamilnadu Polls 2026: திமுகவுக்கு இதுதான் இறுதி தேர்தல் என்று கடையநல்லூர் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார். தென்காசி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமுரளி (கடையநல்லூர்), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), பிரபாகரன் (ஆலங்குளம்), சீமான் ஜெயசீலன் (சங்கரன்கோவில்) மற்றும் கூட்டணி கட்சியான வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று கடையநல்லூரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதையும் படிக்க: 500 சவரன் நகை, சொகுசு கார்கள், ரூ. 1 கோடி வைரம்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
வங்கி கணக்கில் ரூ.10,000 செலுத்துவோம்:
அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது, அதிமுக தேர்தல் அறிக்கையை திமுக அப்படியே காப்பி அடித்து உள்ளது. திமுக கடந்த தேர்தலில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் மக்களை ஏமாற்ற பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்குவோம் என்று அறிவித்தோம். ஆனால் அதையே மு.க.ஸ்டாலின் ரூ.8 ஆயிரத்திற்கு கூப்பன் வழங்கப்படும் என்று கூறுகிறார். அந்த கூப்பன் வழங்கினால் தான் அவர்களால் ஊழல் செய்ய முடியும். தேர்தல் அறிக்கையில் கூறிய ரூ.10 ஆயிரத்தை பெண்களின் வங்கி கணக்கில் செலுத்துவோம்.




விவசாயிகள் பயிர் கடன் தள்ளுபடி:
அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன் ரூ.12 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும். திமுகவில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆட்கள் இல்லாமல் அந்த கட்சி உள்ளது. அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, நடவடிக்கை எடுக்கப்பட்ட நபர்களை பிடித்து தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்து உள்ளார்கள்.
திமுக தான் அதிமுகவின் எதிரி:
அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் நிறைய முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. இன்னும் அதிமுக சொந்த காலில் நிற்கிறது. திமுக, கூட்டணி காலில் நிற்கிறது. நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். அதிமுகவின் எதிரி திமுக தான். அவர்களை வீழ்த்த தான் கூட்டணி அமைத்து உள்ளோம். தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இதனால் அவர்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். இது தான் திமுகவுக்கு இறுதி தேர்தல். குடும்ப ஆட்சியை வீழ்த்த வேண்டும் என மக்கள் தயாராகிவிட்டார்கள். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
மேலும் படிக்க: 5 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..
அப்போது மதவாத கட்சியாக தெரியவில்லையா?
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்து இருப்பதால் மதவாத கட்சி என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்த போது, அந்த கட்சி மதவாத கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களது கொள்கையை ஒரு நாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பதை சிறுபான்மையின மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.