Tamilnadu Election 2026 : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திருவிழா”.. ஆட்சி அரியணையில் ஏறப்போவது யார்?
Tamilnadu Assembly Elections 2026: தமிழகத்தில் ஜனநாயக திருவிழா இன்று காலை 7 மணிக்கு சிறப்பாக தொடங்குகிறது இதில், வாக்காளர்கள் ஆர்வமுடன் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்த தேர்தலில் எந்த கட்சி ஆட்சி அரியணையில் ஏறப்போகிறது என்பது மே 4- ஆம் தேதி தெரியவரும்.
தமிழகமே எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று வியாழக்கிழமை ( ஏப்ரல் 23) காலை 7 மணிக்கு சிறப்பாக தொடங்குகிறது. இதில், தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சியின் பதவிக் காலம் வருகிற மே 7- ஆம் தேதியுடன் ( வியாழக்கிழமை) நிறைவடைகிறது. இதனால், தமிழகத்தில் புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜனநாயக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என ஆண் வேட்பாளர்கள் 3,585 பேரும், பெண் வேட்பாளர்கள் 438 பேரும் என மொத்தம் 4,023 பேர் அவரவர் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 ஆண் வேட்பாளர்கள், 2 கோடியே 93 லட்சத்து 04 ஆயிரத்து 905 பெண் வேட்பாளர்கள், 7 ஆயிரத்து 728 மூன்றாம் பாலினத்தவர்கள் என சுமார் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசியல் களத்தில் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவி வருகிறது. இதில், திராவிட முன்னேற்ற கழகம் 164 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடு செய்து கொடுத்துள்ளது.
மேலும் படிக்க: வாக்காளர்களே.. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி?.. முழு விவரம்!!




169 தொகுதிகளில் களம் காணும் அதிமுக
இதேபோல, அதிமுக 169 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 65 தொகுதிகளை கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ( அன்புமணி தரப்பு), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு பங்கீடு செய்து கொடுத்துள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம், சசிகலா தலைமையிலான அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.
எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும்
கடந்த சட்டமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் 2026 சட்டமன்ற தேர்தல் பெரிதளவில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. எனவே, இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெறும். இதற்கான வாக்குகள் எண்ணிக்கை மே 4- ஆம் தேதி ( திங்கள்கிழமை) ஒரே கட்டமாக எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறதா… அல்லது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையப் போகிறதா…. இல்லை அரசியல் களத்துக்கு புதிய வரவான தமிழக வெற்றி கழகம் தனித்து ஆட்சி அமைக்க போகிறதா என்பதை மே 4-ஆம் தேதி நமக்கு தெரியப்படுத்தும்..!
மேலும் படிக்க: EVM & VVPAT: முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி! 2026 சட்டமன்றத் தேர்தலின் அதிரடி பாதுகாப்பு வியூகம்!