ரூ.1,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் பரபரப்பு தகவல்
TN Election Update : தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு ரூ.1,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.599 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்ரல் 22 : தமிழ்நாடு, மேற்கு வங்க தேர்தலை முன்னிட்டு ரூ.1,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரூ.599 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் ரூ.3.85 கோடி மதிப்பிலான 1.17 லட்சம் லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ரூ.1,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை தற்போது 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். அவர்களில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7,728 பேர் மூன்றாம் பாலினத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : நாளை வாக்குப்பதிவு.. மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்..




இந்த நிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஏப்ரல் 22, 2026 செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இதுவரை 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை 4 கட்டுப்பாட்டு மையங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் ரூ.1,262 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள், மதுபானம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.
இதனையடுத்து அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வது குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அர்ச்சனா பட்நாயக், பணப்பட்டுவாடாவை தவிர்க்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம், எந்த இடத்திலும் சிக்கல்கள் இருந்தால் நீங்கள் சொல்லலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கமளித்தார்.
இதையும் படிக்க : நாளை சட்டமன்ற தேர்தல்.. விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்குசாவடிகளில் செல்போன்கள் வைக்க சிறப்பு பைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களித்த பிறகு டோக்கனை கொடுத்து தங்களது செல்போன்களை வாக்காளர்கள் பெறலாம். மேலும் வாக்கு செலுத்தும் போது அதனை புகைப்படம் எடுத்து பதிவிட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.