தேனி, ஏப்ரல் 22, 2026: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் ஆணையம் தரப்பில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணிகள் இன்று பிற்பகல் முதல் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வாக்குப்பதிவுக்கு தயாராகும் தமிழகம்:
மேலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டதுடன், கூடுதல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: நாளை வாக்குப்பதிவு.. மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்..
அதேபோல், தலைமைச் செயலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 பேருக்காக தனி வாக்குச்சாவடி:
இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை கிராமத்தில் 5 வாக்காளர்களுக்காக தனி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 75 கிலோமீட்டர் தூரத்தை, 3 மணி நேர பயணத்தில் கடந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ரூ.1,000 கோடி மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் பரபரப்பு தகவல்
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டபோது, இந்த வாக்குச்சாவடி குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குறிப்பாக பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதையடுத்து, வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட செல்லுபடியாகும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொண்டு வாக்குப்பதிவில் பங்கேற்கத் தயாராகி வருகின்றனர்.