A.Arunmozhi Thevan Tamil Nadu Election: புவனகிரி தொகுதியில் மீண்டும் எம்எல்ஏ-வாக வலம் வருவாரா அருண்மொழிதேவன்!
Tamil Nadu Elections 2026: அதிமுகவில் முதலில் சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ வாக இருந்து வரும் அருண்மொழிதேவன் மீண்டும் வெற்றி பெற்று புவனகிரி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா.
தமிழகத்தில் அதிமுகவில் கடலூர் மாவட்டம், புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருபவர் அருண்மொழிதேவன். இவர், கடந்த 1968- ஆம் ஆண்டு ஏ. வி. ஆறுமுகத்துக்கு மகனாக பிறந்தார். இளமை காலத்தில் அரசியல் மீதான ஆர்வம் மற்றும் அதிமுகவில் இணைய வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் அந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் தொண்டனாக இணைந்தது முதல் கட்சிப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வந்தார் அருண்மொழித்தேவன். பின்னர், 2006- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அருண்மொழித்தேவன் அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் தனது வெற்றியை பதிவு செய்து எம்எல்ஏவாக சட்டமன்றத்துக்குள் அடி எடுத்து வைத்தார்.
நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்த அருண்மொழிதேவன்
இதைத் தொடர்ந்து, கடந்த 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அந்த தேர்தலில் தனது தீவிர கட்சி பணி மற்றும் பிரச்சாரத்தின் காரணமாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் எம். பி.யாக அடி எடுத்து வைத்தார். கட்சியில் முதல் முதலாக தேசிய அரசியலில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை, நல்ல முறையில் அருண்மொழிதேவன் பயன்படுத்திக் கொண்டதுடன் 5 ஆண்டுகாலம் எம்பியாக தேசிய அரசியலை முன்னெடுத்தார்.
மேலும் படிக்க: K.A.Sengottaiyan Tamil Nadu Election: தவெகவில் ஐக்கியமான செங்கோட்டையன்.. கோபி தொகுதியை தக்க வைப்பாரா?!




2021- மீண்டும் மாநில அரசியலுக்கு திரும்பிய அருண்மொழிதேவன்
பின்னர், 2021- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநில அரசியலுக்கு திரும்பிய அருண்மொழித்தேவன் கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார். அந்த தேர்தலிலும் தனது வெற்றி முகத்தை விட்டுக் கொடுக்காமல் வெற்றியை தனதாக்கி எம்எல்ஏவாக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார். 2006 சட்டமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் களம் இறங்கிய அருண்மொழிதேவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே பாலகிருஷ்ணனை வீழ்த்தி 56,327 (50.75 சதவீதம்) வாக்குகள் பெற்று தனது வெற்றியை உறுதி செய்தார்.
புவனகிரி தொகுதியை தக்க வைத்துக்கொள்வாரா
இதே போல 2014- ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நந்தகோபாலகிருஷ்ணனை வீழ்த்தி 4,81,429 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதே போல, 2021 சட்டமன்ற தேர்தலில் புவனகிரி சட்டமன்ற தொகுதிகள் களம் இறக்கப்பட்ட அருண்மொழிதேவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே. துரை சரவணனை வீழ்த்தி 96,453 (48.92) சதவீதம் வாக்குகள் பெற்று எம்எல்ஏவாக இருந்து வருகிறார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் புவனகிரி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலிலும் தனது விடாமுயற்சியால் வெற்றியை தக்க வைத்துக் கொள்வார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும் படிக்க: D. Jayakumar Tamil Nadu Election: 5 முறை வெற்றி.. 2 முறை தோல்வி… ராயபுரத்தில் வெற்றிக் கனியை தட்டி பறிப்பாரா ஜெயக்குமார்!