AIADMK: இபிஎஸ் குறிவைத்தால் தப்பாது.. கூட்டணிக்கு வராத கட்சிகள் குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார்!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு எதிரான கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார். நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் அதிமுகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்த நிலையில் ஆர்.பி. உதயகுமார் திமுகவுக்கு எதிரான பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை, ஜூலை 24: 2026 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை நாங்கள் புலி வேட்டைக்கு செல்கிறோம். எடப்பாடி பழனிசாமி குறிவைத்தால் தப்பாது என எதிர்க்கட்சி துணைத்தலைவரான ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை தமிழ்நாடு சந்திக்க இன்னும் 8 மாத காலமே உள்ளது. இப்படியான நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் களப்பணிகளை தீவிரமாக ஆற்றி வருகின்றன. அதேசமயம் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் அரசியல் கட்சி தலைவர்கள் எல்லாம் மக்களை சந்திக்க முடிவு செய்து பயணம் மேற்கொள்ள தொடங்கியிருக்கிறார்கள். இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
மற்ற 3 கட்சிகளும் எப்படியாவது திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை பிரதான குறிக்கோளாக கொண்டு தனித்தனியாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும் என தெரிவித்தார். அதேசமயம் நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கும் கூட்டணியில் சேர அழைப்பு விடுத்தார். ஆனால் இரண்டு கட்சிகளும் அந்த அழைப்பை நிராகரித்து விட்டது.
இதையும் படிங்க: ‘தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது’ – எடப்பாடி பழனிசாமி




ஆர்.பி.உதயகுமார் கொடுத்த விளக்கம்
இப்படியான நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமாரிடம், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரண்டும் அதிமுக விடுத்த அழைப்பை நிராகரித்தது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, “திமுகவை பிரதான கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கிறது. தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவையும் திமுகவை எதிர்க்கிறது. அதேபோல் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் எதிர்க்கிறார்கள்.
இப்படி எல்லாரும் எதற்கும் நிலையில் அவர்கள் அனைவரும் ஒன்று சேரும்போது அந்த எதிர்ப்பு, நோக்கம் நிறைவேறும். நமக்கு நோக்கம் நிறைவேற வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் எண்ணமாக உள்ளது. அதேசமயம் திமுகவுக்கு ஆதரவாக அவர்களது கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் என 20% தான் உள்ளது. ஆனால் 80 சதவீதம் திமுக இனி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்ட கட்சிகள் தான் உள்ளது. இப்படி எதிர்க்கும் கட்சிகளில் 52 ஆண்டுகள் அனுபவம் கொண்ட, மக்களிடையே நம்பிக்கை கொண்ட நபராக எடப்பாடி பழனிச்சாமி திகழ்கிறார்.
இதையும் படிங்க: அதிமுகவை விமர்சிப்பதே திமுக அரசின் முதல் கடமையாகும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்..
கள நிலவரம், மக்களின் எண்ணத்தை தான் அவர் கூறியுள்ளார். புலி வேட்டைக்கு செல்லும்போது இடையில் அணிலும், குயிலும் பாடியதை கேட்டால் குறி தப்பி விடும். இப்படி ஒரு நிலையில் எடப்பாடி பழனிசாமி குறிவைத்தால் தப்பாது” என ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.