‘சிம் ஸ்வாப் மோசடி’.. அலட்சியமே காரணம்.. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.55 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!!
SIM Swap Fraud case: தீர்ப்பின் போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் பின்வருமாறு குறிப்பிட்டார். ஒரு மோசடி நபருக்கு மாற்று சிம் கார்டை வழங்குவதன் நிதி விளைவுகள், பாதிக்கப்பட்டவருக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. இந்தத் தீர்ப்பு காட்டுவது போல, சிவில் சட்டத்தின்படி தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்திற்கும் இது கடுமையான விளைவுகளை உண்டாக்கும்.
பெங்களூரு, ஜுன் 10: சிம் கார்டு மாற்றுதல் (SIM Swap) மோசடியில் அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL)-ன் அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டித்துள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிக்கு ரூ.55 லட்சத்திற்கும் அதிகமாக இழப்பீடு மற்றும் அபராதம் வழங்குமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீ பசவேஸ்வரா பட்டண சஹகார வங்கி நியாமிதா (Sri Basaveshwara Pattana Sahakara Bank Niyamitha) என்ற கூட்டுறவு வங்கி, கனரா வங்கியில் நடப்புக் கணக்கு ஒன்றை வைத்திருந்தது. இந்த வங்கிக் கணக்கின் மூலம் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான ஒருமுறை கடவுச்சொல் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக, பிஎஸ்என்எல் மொபைல் எண் ஒன்று இணைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: காகித ரூபாய் நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி?.. அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்?.. மத்திய அரசு கொடுத்த விளக்கம்!!
கடந்த 2019 பிப்ரவரி 6 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சைபர் குற்றவாளிகள் சிலர் இந்த கூட்டுறவு வங்கியின் கணக்கிலிருந்து ₹87.7 லட்சத்தை ஏழு முறை அங்கீகரிக்கப்படாத ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் சட்டவிரோதமாகச் சுருட்டினர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அலட்சியம்:
விசாரணையில், இந்த மோசடிக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கடுமையான அலட்சியமே காரணம் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. பெங்களூருவில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து, சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியின் எந்தவொரு கோரிக்கையோ அல்லது முறையான அடையாளச் சரிபார்ப்போ இல்லாமல், மோசடி கும்பலுக்கு மிக எளிதாக மாற்று சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்திய குற்றவாளிகள், வங்கியின் அசல் சிம் கார்டை முடக்கிவிட்டு, தங்களின் புதிய சிம் கார்டு மூலம் கனரா வங்கியின் முக்கிய ஓடிபி குறுஞ்செய்திகளை இடைமறித்துப் பெற்று இந்த மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
மோசடி நடந்த பிறகு, துரித நடவடிக்கையாக ₹30 லட்சம் மீண்டும் வங்கியின் கணக்கிற்குத் திருப்பிக் கொண்டுவரப்பட்டது. மேலும் காவல்துறையினரால் ₹7.12 லட்சம் மீட்கப்பட்டது. இருப்பினும், வங்கியால் மீட்க முடியாத நிகர இழப்பாக ₹50.5 லட்சம் இருந்தது.
பிஎஸ்என்எல்-ன் வாதம் நிராகரிப்பு:
இந்த வழக்கில் தங்களுக்குப் பொறுப்பில்லை என்று வாதிட்ட பிஎஸ்என்எல், “எங்கள் மேலாளர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை; மேலும் கூட்டுறவு வங்கிக்குக் காப்பீட்டுத் தொகை (Insurance payouts) கிடைத்துவிட்டது” என்று தப்பிக்க முயன்றது. ஆனால், இந்த வாதங்களை நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் முற்றிலுமாக நிராகரித்தார். தவறு செய்த அதிகாரி மீது பிஎஸ்என்எல் நிறுவனம் ஏற்கனவே உள்விவகார ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுவே நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதற்கான சான்றாகும் என்றார்.
நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துக்கள்:
தீர்ப்பின் போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் பின்வருமாறு குறிப்பிட்டார். ஒரு மோசடி நபருக்கு மாற்று சிம் கார்டை வழங்குவதன் நிதி விளைவுகள், பாதிக்கப்பட்டவருக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. இந்தத் தீர்ப்பு காட்டுவது போல, சிவில் சட்டத்தின்படி தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்திற்கும் இது கடுமையான விளைவுகளை உண்டாக்கும்.
மாற்று சிம் கார்டு வழங்கும் முன் சந்தாதாரரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது என்பது வெறும் நடைமுறைச் சடங்கு அல்ல. ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இத்தகைய கோரிக்கைகளைக் கடுமையான கவனத்துடன் அணுக வேண்டும். ஆவணங்கள் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்; அடையாளத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், கோரிக்கையை நிராகரித்துவிட்டு சந்தாதாரரை மாற்று வழிகளில் தொடர்புகொள்ள வேண்டும்.
இதையும் படிக்க : ரேஷன் கார்டில் இத செய்யவில்லை என்றால் அரிசி கிடைக்காது.. முக்கிய அறிவிப்பு!
நீதிமன்றம் விதித்த அதிரடி அபராதம்:
இதற்கு முன்னதாக நிரந்தர மக்கள் நீதிமன்றம் விதித்திருந்த சிறிய தொகையான ₹5 லட்சம் அபராதத்தை ரத்து செய்து, இழப்பீட்டுத் தொகையைக் கர்நாடக உயர் நீதிமன்றம் கணிசமாக உயர்த்தியுள்ளது. அதன்படி, மீட்கப்படாமல் இருந்த அசல் இழப்புத் தொகையான ₹50.5 லட்சத்தை பிஎஸ்என்எல் வழங்க வேண்டும். வங்கியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தது மற்றும் செயல்பாட்டு முடக்கத்தை ஏற்படுத்தியதற்காகக் கூடுதல் நஷ்ட ஈடாக ₹5 லட்சம் வழங்க வேண்டும். இந்த மொத்தத் தொகைக்கும், மோசடி நடந்த தேதியிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டி கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.