மாற்றி யோசித்த நபர்… வெளிநாட்டு பிராண்டுகளை பின்னுக்கு தள்ளிய ட்ரூல்ஸ் நிறுவனம் – யார் இந்த ஃபஹிம்?
Indian brand that beat global giants : வெளிநாட்டு பிராண்ட்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் தனது கடின முயற்சியால் ரூ.800 கோடி மதிப்பிலான ட்ரூல்ஸ் நிறுவனத்தை உருவாக்கி சாதித்திருக்கிறார் ஃபஹிம் சுல்தான் அலி. அவரது வெற்றிக் கதையை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

ஒரு நல்ல ஐடியா, அதற்கு பின்னால் கடின உழைப்பு, நல்ல நோக்கம் மற்றும் தொலைநோக்கு பார்வை இருந்தால் எந்த உயரத்தையும் எட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் ஃபஹிம் சுல்தான் அலி. கடந்த 2010 ஆம் ஆண்டு, சத்தீஸ்கரின் (Chhattisgarh) ராஜ்நந்த்கான் பகுதியைச் சேர்ந்த ஃபஹிம் சுல்தான், இந்தியாவில் தரமான மற்றும் மலிவான செல்லப்பிராணி உணவு இல்லையென்பதை உணர்ந்தார். அப்போது இந்திய சந்தை முழுவதும் வெளிநாட்டு பிராண்டுகளால் நிரம்பி இருந்தது. ஆனால் அவை விலை அதிகமாக இருந்ததோடு, இந்திய செல்லப்பிராணிகளின் ஊட்டச்சத்து தேவைகளை சரியாக பூர்த்தி செய்யவில்லை. அப்போது தான் ஃபஹிமிற்கு இந்த யோசனை தோன்றியிருக்கிறது. அப்படி உருவாது தான் ட்ரூல்ஸ் (Drools) நிறுவனம்.
ட்ரூல்ஸ் பிறந்த கதை
இதற்கான மாற்றாக, ஐபி குரூப் எனப்படும் கால்நடை உணவுப் பொருள் நிறுவனத்தின் துணையுடன், ஃபஹிம் ட்ரூல்ஸ் பெட் ஃபுட் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தை துவக்கினார் தொடக்கத்தில், கடைகள் மற்றும் வணிகர்களிடம் ட்ரூல்ஸ் பொருட்களை கொண்டு சேர்ப்பதற்கு மிகவும சிரமமடைந்தார். அவரது தயாரிப்பை மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டமைப்பது ஒரு சவாலாக இருந்தது. ஆனால் சிறிது சிறிதாக, நுகர்வோரிடையே ட்ரூல்ஸ் என்ற பெயர் நம்பிக்கையை சம்பாதிக்கத் தொடங்கியது.
இதையும் படிக்க : பேக்கரியில் கூலி வேலை பார்த்த நபர்…. இன்று கோடிகளில் வருமானம் – ’99 பேன்கேக்ஸ்’ நிறுவனர் வென்ற கதை




அந்த வகையில் இன்று ட்ரூல்ஸ் நிறுவனம் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய செல்லப்பிராணி உணவுப் பிராண்ட் ஆக வளர்ந்துள்ளது. வருடத்திற்கு சுமார் 40% வளர்ச்சி அளவைக் காணும் இந்நிறுவனத்தின் வருவாய் இப்போது ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா, துபாய், இஸ்ரேல் உள்ளிட்ட 22 நாடுகளுக்கும் ட்ரூல்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது.
ட்ரூல்ஸ் தயாரிப்புகளின் தனித்துவம்
இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளில் 650க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன , டிரை ஃபுட், வெட் ஃபுட், ட்ரீட்ஸ், சப்ப்ளிமெண்ட்கள் உள்ளிட்டவை நாய்கள் மற்றும் பூனைகள் ஆகியவற்றுக்கானவை. விலங்குகளின் இனம் மற்றும் வயதுக்கு ஏற்ப ஊட்டச்சத்து நிபுணர்களுடன் இணைந்து இந்த உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதையும் படிக்க : ஒரு ஸ்மார்ட் ஐடியா.. ரூ.50,000 முதலீடு…குடும்ப தொழிலை ரூ.340 கோடி நிறுவனமாக மாற்றிய இளைஞர்!
இந்நிறுவனம் 6 நவீன உற்பத்தி யூனிட்களுடன், 1.6 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்ட குட்டவுன் வைத்துள்ளது. இந்நிறுவனத்தில் 3,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பணியாற்றுகிறார்கள், அதில் பாதி பேர் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் ட்ரூல்ஸ் உணவுகளை அடையச் செய்கின்றனர்.
இன்று ட்ரூல்ஸ், ஆன்லைனிலும் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கக்கூடிய பிராண்டாக மாறியுள்ளது. இதன் வளர்ச்சியை கவனித்த பாலிவுட் நட்சத்திரங்களான கரீனா கபூர் மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் பிராண்டுக்காக விளம்பரம் செய்து வருகின்றனர். இதன் தரமும், நவீனத்துவமும் கொண்ட உற்பத்திகளை தரக்கூடிய ஒரு இந்திய நிறுவனமாக, உலகளவில் ட்ரூல்ஸ் நிறுவனம் ஒரு பெயராக மாறியுள்ளது. நம் நாட்டின் தேவைகளை சரியாக புரிந்துகொண்டு சரியான திட்டமிடலுடன் முயற்சித்தால் சாதிக்க முடியும் என்பதற்கு ஃபஹிம் சுல்தான் அலியின் வாழ்க்கை ஒரு முன்னுதாரணம்.