எல்ஐசி பாலிசி மீது கடன் – வாடிக்கையாளரிடம் சொல்லாமல் வங்கி பாலிசியை சரண்டர் செய்ய முடியுமா?
Loan Against LIC Policy : எல்ஐசி போன்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை அடமானமாக வைத்து வங்கியில் கடனம் பெற்றால், அதற்காக வங்கி பாலிசியை சரண்டர் செய்யும்போது, காப்பீட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
எல்ஐசி போன்ற ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை அடமானமாக வைத்து வங்கியில் கடனம் பெறுவது வழக்கமாகி வருகிறது. இந்த நிலையில் அப்படி அடமானம் வைத்த பாலிசியை சரண்டர் செய்வதற்கு முன், காப்பீட்டு நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை என தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. கடனுக்குப் பிணையாக பாலிசி வங்கிக்கு ஒப்படைக்கப்பட்ட பிறகு, நிலுவைத் தொகையை வசூலிக்க பாலிசிதாரரின் ஒப்புதலோ, அவருக்கு முன்னறிவிப்போ இல்லாமல் வங்கி அதை சரண்டர் செய்யலாம் என ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
வாடிக்கையாளரிடம் சொல்லாமல் வங்கி பாலிசியை சரண்டர் செய்ய முடியுமா?
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமர் சிங் என்பவர் கடந்த 2001 ஆம் ஆண்டு எல்ஐசியிடம் ரூ.5 லட்சத்துக்கு ஆயுள் காப்பீட்டு பாலிசியை எடுத்திருக்கிறார். இந்த பாலிசி வருகிற டிசம்பர் 8, 2026 அன்று பாலிசி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் அமர் சிங் தனது ஆயுள் காப்பீட்டு பாலிசியை அடமானமாக வைத்து, ஐடிபிஐ வங்கியில் ரூ.79,000 கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமர் சிங் கடனுக்கான தவணையைத் தவறாமல் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த 2011 ஆம் ஆண்டு, அவரது ஒப்புதல் இல்லாமலேயே எல்ஐசி அந்த பாலிசியை சரண்டர் செய்திருக்கிறது. இதற்கான அப்போதைய மதிப்பு ரூ.2,26,325 என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : நிலையான வைப்பு நிதி திட்டம்.. முதலீடு செய்வதற்கு முப்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!




பாலிசியை சரண்டர் செய்யும் முன் தன்னிடம் தெரிவிக்கவில்லை என அமர் சிங் குற்றம்சாட்டினார். ஆனால் எல்ஐசியிடம் இருந்தும் ஐடிபிஎஐ வங்கியில் இருந்தும் முறையான பதில் இல்லாததால் சோனிபட் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடினார். இந்த வழக்கில் கடந்த 2015 ஆண் ஆண்டு மாவட்ட நுகர்வோர் ஆணையம் அமர் சிங்குக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. சரண்டர் செய்யப்பட்ட தேதியிலிருந்து, அதே பாலிசி எண்ணுடன் பாலிசியை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், செலுத்தப்படாத காலத்துக்கான பிரீமியத்தை வட்டியுடன் பெற்றுக்கொள்ளவும் நுகர்வோர் ஆணையம் அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும், வங்கியைப் பொறுத்தவரை, ரூ.2,26,325 தொகையை எல்ஐசிக்குத் திருப்பித் தர வேண்டும் என்றும் அந்தத் தொகைக்கு 2011 அக்டோபர் 5 முதல் 9 சதவிகித வட்டி கணக்கிட்டு சேர்க்கப்பட வேண்டும் என்றும் அமர் சிங்கிற்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கு செலவுகளுக்காக கூடுதலாக ரூ.10,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து எல்ஐசி ஹரியானா மாநில நுகர்வோர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த நிலையில் சோனிபட் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அளித்த தீர்ப்பை ரத்து செய்த மாநில நுகர்வோர் ஆணையம் பாலிசியை ஒப்படைக்கப்பட்ட பிறகு அதற்கானண கட்டுப்பாடு வங்கியிடமே இருப்பதாகதெரிவித்தது. இதனால் வாடிக்கையாளருக்கு தனியாக நோட்டீஸ் அனுப்ப தேவை இல்லை என்றும் உத்தரவிட்டது.
இதையும் படிக்க : தங்கம் குறித்த ஷாக் கணிப்பை வெளியிட்ட Bank Of India.. என்ன தெரியுமா?
இதனையடுத்து தனக்கு நீதி கேட்டு தேசிய நுகர்வோர் ஆணையத்தில் அமர் சிங் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2, 2026 அன்று இந்த வழக்கை விசாரித்த தேசிய ஆணையம், புகார்தாரர் பாலிசியை முறைப்படி வங்கிக்கு ஒப்படைத்திருக்கிறார். ஆனால் அவர் கடனை அவர் திருப்பி செலுத்தாததால் வங்கி அதை சரண்டர் செய்தது. மேலும் அன்றைய தேதிக்கான சரண்டர் மதிப்பைக் கணக்கிட்டு, நிலுவைத் தொகையை முறையாக அனுப்பியது. எனவே காப்பீட்டு நிறுவனத்தின் சேவையில் எந்தக் குறைபாடும் இல்லை என்றும், விதிகள் மற்றும் நடைமுறைகளின்படியே அது செயல்பட்டுள்ளது என்றும் ஆணையம் கூறியது.
மேலும் காசோலை பணமாக்கப்படுவதற்கு முன்பே அமர் சிங் வங்கிக் கணக்குகளை மூடிவிட்டார். இதனால் ரூ.2,26,325 தொகை வங்கியின் சஸ்பென்ஸ் கணக்கில் முடங்கிக் கிடந்தது. இந்தத் தொகையை அதுவரை சேர்ந்த வட்டியுடன் ஒரு மாதத்துக்குள் விடுவிக்க வேண்டும் எனவும் தவறினால், நிலுவைத் தொகைக்கு ஆண்டுக்கு 6% வட்டி செலுத்த வேண்டும் என்றும் ஐடிபிஐ வங்கிக்கு ஆணையம் உத்தரவிட்டது.