தொடர் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?
Gold Price Falling Continuously | மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போதைய சூழலில் தங்கம் வாங்கலாமா, தங்கத்தில் முதலீடு செய்வது சிறப்பானதா என்பது குறித்து பார்க்கலாம்.
பங்குச்சந்தை, புவிசார் பதற்றங்கள் என தங்கம் விலை (Gold Price) உயர்வதற்கும், குறைவதற்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. கால சூழலுக்கு ஏற்ப தங்கம் விலை குறைவது, உயர்வதும் நடைபெறும். தற்போதைய நிலையில், சர்வதேச அளவில் மேற்கு ஆசியா போர் (West Asia War) பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், கடந்த நான்கு நாட்களாக விலையில் மாற்றமில்லாமல் இருந்த தங்கம் இன்று சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய சூழலில் தங்கம் வாங்குவது சரியானதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நான்கு நாட்களாக மாற்றமில்லாமல் நீடித்த தங்கம் விலை
பிப்ரவரி 28, 2026 அன்று முதல் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக உருவாகியுள்ள சர்வதேச பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் 01, 2026 முதல் ஜூன் 03, 2026 வரை தங்கம் விலை எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.14,480-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : இனி நொடி பொழுதில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. விரைவில் வரப்போகும் இபிஎஃப்ஓ 3.0!




தற்போதைய சூழலில் தங்கம் வாங்குவது சரியா?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தங்கம் விலை இத்தகைய சரிவை சந்தித்துள்ளது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் 5.10 சதவீதம் தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதலே பெரிய மாற்றம் இல்லாமல் தங்கம் விற்பனையாகி வருகிறது. நீண்ட கால தேவைகளுக்காக தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கும் நபர்கள் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யலாம். நீண்ட கால அடிப்படையில் அது சிறந்த லாபத்தை கொடுக்கும்.