ஈரான் மீது இன்று கடுமையான தாக்குதல் நடத்தப்படும் – டிரம்ப் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும், அத்தாக்குதல் எவ்வித கருணையுமின்றி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். டிரம்ப் ட்ரூத் சமூக ஊடகக் கணக்கு மூலம், ஜூன் 11, 2026 இன்றிரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்தார். ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு மார்க்கெட்டை முழுமையாகக் கைப்பற்றப்போவதாகவும், வெனிசுலாவைப் போலவே ஈரானையும் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போவதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமைதி ஒப்பந்தம் மூலம் மோதல் முடிவுக்கு வரவிருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்தது.
டிரம்ப் கடும் எச்சரிக்கை
பரஸ்பர தாக்குதல்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், ஒரு ஆரம்பக்கட்ட முடிவு எட்டப்பட்டு வருவதாகவும் ஈரான் தொடர்பான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், டிரம்ப்பின் இந்த அச்சுறுத்தல் பதிவு ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது. இதன் மூலம் நிலைமை மேலும் மோசமடைவது போல் தெரிகிறது.
இதையும் படிக்க : ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு அவசர எச்சரிக்கை.. உடனே நாட்டை விட்டு வெளியேற அறிவுரை!




தனது ட்ரூத் கணக்கில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்கா ஜூன் 11, 2026 இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தவுள்ளது. மிக விரைவில், நாங்கள் கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்புகளைக் கைப்பற்றி, வெனிசுலாவைப் போலவே அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயு மார்கெட்களை முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம். இத்தகைய மார்கெட் முறை வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் சிறப்பாகச் செயல்படுகிறது. இந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதற்கு நன்றி. அதிபர் டொனால்ட் ஜே. டிரம்ப், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக ஜூன் 10, 2026 அன்று விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து டிரம்ப் இன்று மீண்டும் எச்சரிக்கைவிடுத்துள்ளார். ஈரானின் பொருளாதார உயிர்நாடியாகவும், அதன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவிகிதத்தைக் கையாளும் இடமாகவும் விளங்கும் கார்க் தீவைக் கைப்பற்றுவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். டிரம்பின் இலக்கு கார்க் தீவுதான் என்ற கணிப்புகளை அவரது இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த ஜூன் 9, 2026 செவ்வாய்க்கிழமையன்று, ஹார்முஸ் நீரிணைக்கு அருகே தனது ராணுவ ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. அதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு கடுமையான தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்துப் போக்குவரத்தையும் நிறுத்திவிட்டதாக ஈரானின் ராணுவத் தலைமை அறிவித்தது.
இதையும் படிக்க : முடிந்தது டிரம்பின் எச்சரிக்கை.. மீண்டும் போர் அபாயம்? அடுத்து நடக்கப்போவது என்ன?
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஜோர்டான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இதற்கிடையில், ஓமன் கடற்கரைப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் காணாமல் போன மூன்று இந்தியர்கள் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ள இந்தியா, இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.