ஓமன் அருகே கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்.. 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு
US Attack - 3 Indian Sailors Dead: தொடர்ந்து மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்றத்தில் மத்தியில் ஓமன் கடற்கரை அருகே கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தகவல் தெரிவித்துள்ளார்.
ஓமன் கடற்கரை அருகே அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் சிக்கிய கப்பலில் காணாமல் போனதாக கூறப்பட்ட 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் கடல் போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த மூன்று இந்திய மாலுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலாவ் நாட்டுக் கொடியுடன் இயக்கப்பட்டு வந்த “எம்.டி. செட்டபெல்லோ” என்ற எண்ணெய் கப்பலில் மொத்தம் 28 பேர் பணியாற்றி வந்தனர். இதில் 24 இந்தியர்கள், 2 பாகிஸ்தானியர்கள், ஒரு உக்ரைன் நாட்டவர் மற்றும் ஒரு ரஷ்ய நாட்டவர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
3 இந்திய மாலுமிகள் உயிரிழப்பு:
It is deeply unfortunate to learn of the tragic incident aboard the Palau-flagged MT Settebello. Sadly, three Indian seafarers initially reported missing are now confirmed dead after bodies have been located and identified.
This is a profound loss to our maritime family. The…
— Sarbananda Sonowal (@sarbanandsonwal) June 11, 2026
இந்த கப்பல் ஓமன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அமெரிக்க ராணுவ தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. முதலில் 21 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும், 3 பேர் மாயமானதாகவும் தகவல் வெளியானது. பின்னர் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து அமைச்சர் சர்பானந்த சோனோவால் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “பலாவ் நாட்டுக் கொடியுடன் செயல்பட்ட எம்.டி. செட்டபெல்லோ கப்பலில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. காணாமல் போனதாக கூறப்பட்ட மூன்று இந்திய மாலுமிகளும் உயிரிழந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நமது கடல் போக்குவரத்து குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு” என தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றும், மீட்கப்பட்ட மாலுமிகளை உடனடியாக இந்தியா அழைத்து வரவும், உயிரிழந்தோரின் உடல்களை இறுதிச்சடங்கிற்காக விரைவாக இந்தியா கொண்டு வரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா கடும் கண்டனம்
இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்றபோது இந்தியர்கள் பயணித்த கப்பல் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது.
“இப்பகுதியில் கப்பல்கள் மீது நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த கவலைக்குரியவை. இது மத்திய கிழக்கு பகுதியில் நீடித்து வரும் மோதல்களின் நேரடி விளைவாகும். உடனடியாக பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா விளக்கம்
இதற்கிடையில் அமெரிக்க மத்திய கட்டளைத் தளம் (US Central Command) இந்த தாக்குதலை ஒப்புக்கொண்டுள்ளது. ஈரானிலிருந்து எண்ணெய் கடத்த முயன்றதால் அமெரிக்கா விதித்திருந்த தடையை கப்பல் மீறியதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க போர் விமானம் கப்பலை குறிவைத்து தாக்கியதாகவும், அதனால் கப்பல் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க படைகள் வழங்கிய உத்தரவுகளை கப்பல் பணியாளர்கள் மீண்டும் மீண்டும் பின்பற்ற தவறியதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரி அழைப்பு
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணையில் பதற்றம்
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணை, மத்திய கிழக்கு போர் காரணமாக கடந்த சில மாதங்களாக கடும் பதற்றத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலால் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தனது கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவும் தனிப்பட்ட தடைகளை அமல்படுத்தி வருவது சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கை
இதற்கு முன்பு ஓமனின் சோஹார் துறைமுகத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக பிரிட்டன் கடல்சார் வர்த்தக கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.
கப்பலின் இயந்திர அறை ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்ததாகவும், அதனால் தீ பரவியதாகவும் பிரிட்டன் கடல்சார் பாதுகாப்பு நிறுவனம் வான்கார்ட் டெக் தெரிவித்தது.
கடந்த திங்கட்கிழமை ஓமன் அதிகாரிகள், மஸ்கட் நகரத்திற்கு தெற்கே கடலில் தீப்பற்றிய கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளை ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.