ஈரான் போரை நிறுத்த அமெரிக்க நாடாளும்னறத்தில் டிரம்புக்கு எதிராக தீர்மானம்!
Bill Passed In America Parliament | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக மிக கடுமையான போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரான் மீதான போரை நிறுத்த அமெரிக்க நாடாளும்னறத்தில் டிரம்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜூன் 04 : ஈரான் மற்றும் அமெரிக்கா (Iran and America) இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக மிக கடுமையான போர் நீடித்து வரும் நிலையில், ஈரான் போரை நிறுத்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் (America President Donald Trump) போர் நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக கட்சியினர் தீர்மானத்தை கொண்டுவந்த நிலையில், பெரும்பான்மை மூலம் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
60 நாட்களுக்கு மேல் போர் தொடுக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை
அமெரிக்காவின் 1973 ஆம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மான சட்டத்தின்படி, அதிபர் பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் வெறும் 60 நாட்கள் மட்டுமே ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடியும். ஒருவேளை 60 நாட்களுக்கு மேலும் போரை தொடர வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இல்லையென்றால் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்கமாட்டோம் – மியான்மர் அதிபர் உறுதி
பாராளுமன்றத்தில் தீர்மானத்தை கொண்டுவந்த ஜனநாயக கட்சியினர்
அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் டிரம்ப், ஈரான் மீதான தாக்குதலை தொடங்கினார். தற்போது அதற்கான காலக்கெடு நிறைவடைந்துள்ளது. இதன் காரணமாக டிரம்ப், சட்டத்தை மீறுவதாக ஜனநாயக கட்சியினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ஈரானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெறுவதற்கான தீர்மானத்தை அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக் கட்சியினர் கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க : 16 வயது வரை சோஷியல் மீடியா தடை.. அதிரடியாக அறிவித்த மலேசியா.. இது பயன் தருமா?
ஆதரவாக வாக்களித்த 215 உறுப்பினர்கள்
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக சுமார் 215 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதேபோல தீர்மானத்துக்கு எதிராக 208 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். தீர்மானத்துக்கு அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் போர் அதிகாரத்தை கட்டுப்படுத்த பிரதிநிதிகள் சபை மேற்கொள்ளும் 4 வது முயற்சி இதுவாகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் உடன் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மீண்டும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.